ஆன்மிக களஞ்சியம்
null

பக்தர்களுக்காக உணவு சமைத்த பாபா

Published On 2024-09-13 11:48 GMT   |   Update On 2024-09-16 05:29 GMT
  • வருகிறவர்கள் தட்சணை கொடுக்க ஆரம்பித்தார்கள்.
  • வாங்குவார், அடுத்த நிமிடமே அருகில் உள்ள ஏழைகளுக்கு அள்ளி இறைத்து விடுவார்.

பாபாவின் புகழ் பரவப் பரவ சீரடிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக்கிக் கொண்டே சென்றது.

ஆரம்ப காலங்களில் வந்தவர்கள் பாமரர்கள், படிப்பு அறியாதவர்கள், சமய உணர்வு உள்ளவர்கள் தான். ஆனால் அந்த நிலை மாறியது.

அறிஞர்கள், வழக்கறிஞர்கள், தத்துவ வித்தகர்கள், சமயப் பெரியார்கள், இன்ஜினியர்கள், அரசு அதிகாரிள், ஊழியர்கள் என்று பல்வேறு தரப்பினரும் பாபாவைத் தரிசிரிக்க வந்தனர்.

வாழ்க்கைப் போராட்டத்தில் நசிந்து போனவர்கள், இனம் புரியாத மனப் போராட்டங்களில் இடிந்து போனவர்களெல்லாம் கரைபுரளும் கோதாவரி வெள்ளம் போல் பாபாவைத் தேடி வந்தனர்.

ஆனால் பாபா எப்போதும் போல் அமைதியாகத் தான் இருந்தார். தம்மைத் தரிசிக்க இவ்வளவு பெரிய கூட்டமா என்று கணக்குப் போட்டு அதற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ளவில்லை.

வருகிறவர்கள் தட்சணை கொடுக்க ஆரம்பித்தார்கள். வாங்குவார், அடுத்த நிமிடமே அருகில் உள்ள ஏழைகளுக்கு அள்ளி இறைத்து விடுவார்.

அன்றைக்கு தன்னைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும் என்று பாபா தீர்மானித்தால் அந்தப் பொறுப்பையும் தாமே சுமந்து கொள்வார்.

தட்சணையாய் வந்த தொகையோடு கடை வீதிக்குப் போவார். சோளம், கேழ்வரகு, மாவு, வாசனைப் பொருட்கள் அனைத்தையும் அவரே வாங்குவார். சுமந்து வருவார்.

சோளம், கோதுமை அரைக்க ஒரு திருகை வைத்திருந்தார். அந்த திருகையால் அவரே மாவு அரைப்பார். அந்தத் திருகை இன்றும் உள்ளது.

மசூதிக்கு முன் பக்கம் உள்ள திறந்த வெளியில் அடுப்பு மூட்டுவார்.

அடுப்பின் மீது ஹண்டி என்ற பாத்திரத்தை வைப்பார். 50 பேர்களுக்கு உணவு சமைக்க ஒரு ஹண்டி, 100 பேர்களுக்கு உணவு சமைக்க இன்னொரு பெரிய ஹண்டி.

சமயங்களில் அவர் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்வார், சமயங்களில் ஆட்டுக்கறி வாங்கி வரச் சொல்லி புலவு தயார் செய்வார்.

மவுலியை அழைப்பார், தொழுகை நடத்தி அந்த உணவைப் புனிதப்படுத்தச் சொல்வார்.

உணவின் முதல் பகுதியை மகால்சபாதிக்கும், தாத்யா படீலுக்கும் அனுப்பி வைப்பார்.

அதன் பின்னர் அவரே பரிமாறுவார். பாபாவின் பொற்கரங்களால் பிரசாதம் பெறுவது என்பது சாதாரண காரியமா? அப்படிப் பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் அல்லவா?

1910-ஆம் ஆண்டு வர தம்மைத் தேடி வந்த பக்தர்களுக்கு பாபா இப்படி உணவு அளித்தார்.

ஆனால் அதன் பின்னர் பாபாவிற்காக வந்த காணிக்கைகள், பழங்கள், இனிப்புப் பண்டகங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை."

அவைகளைக் கொண்டு வந்த பக்தர்கள் மலை மலையாய் குவித்து விட்டனர். அவைகளெல்லாம் பாபாவிற்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டன.

முதலில் ஆரத்தி நிகழ்ச்சி அடுத்த பாபா எல்லோரையும் ஆசீர்வதிப்பார், அணையாது எரியும் அடுப்பில் இருந்து எடுக்கப்பட்ட உதியை (விபூதியை) வழங்குவார்.

அதன் பின்னர் அவர் தர்காவின் உள் அறையில் அமருவார்.

பக்தர்கள் கொண்டு வந்த அத்தனை உணவுப் பண்டங்களும் ஒன்றாகக் கலக்கப்படும், "வழங்குக" என்று பாபா தலை அசைப்பார். எதிரே அமர்ந்த பக்தர்களுக்கு மட்டுமல்ல வெளியே காத்திருந்த பக்தர்களுக்கும் வயிறும், மனமும் நிரம்பும் அளவிற்கு உணவு வழங்கப்படும்.

அந்த வழக்கம் இன்றும் சீரடியில் தொடர்கிறது.

Similar News