ஆன்மிக களஞ்சியம்

தேவர்களும் முனிவர்களும் அருவமாக சுற்றிவரும் கிரிவலம்

Published On 2024-10-16 11:04 GMT   |   Update On 2024-10-16 11:04 GMT
  • மலை சுற்றுவதை பாதி வழியில் இருந்து தொடங்கவோ, பாதி வழியில் முடிக்கவோ கூடாது.
  • மிக வேகமாக கிரிவலம் வருதல் கூடாது. மெதுவாக சாதாரணமாக நடக்க வேண்டும்.

மலையே இறைவனாக அமைந்து உள்ளதால் மலையைச்சுற்றும் பக்தர்கள் சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

கிரிவலம் செல்லும் தினத்தில் குளித்து விட்டு நெற்றியில் திருநீறு அணிந்து செல்ல வேண்டும்.

சிவனின் நாமத்தையோ அல்லது பக்திப் பாடல்களையோ பாடிக் கொண்டே செல்ல வேண்டும்.

மிதியடி அணிந்து மலை சுற்றக் கூடாது. வெயில், மழைக்கு குடையை பயன்படுத்தக் கூடாது.

மலை சுற்ற வாகன துணையை நாடக் கூடாது.

இடமிருந்து வலமாக மட்டுமே மலை வலம்வர வேண்டும்.

கோபம் முதலான உணர்ச்சி நிலைகளை மலைச்சுற்றும் போது தவிர்த்தல் வேண்டும்.

அருணாசலலேஸ்வரர் கோவிலின் கிழக்கு வாசலுக்கு வெளியில் இருந்து மலை சுற்று தொடங்க வேண்டும்.

எந்த இடத்தில் தொடங்கினோமோ அந்த இடத்தில் முடிக்க வேண்டும்.

கிரிவலப்பாதையில் செங்கம் சாலை பிரியும் இடத்திற்கு அருகே நந்திகேசுவரர் சன்னதி உண்டு.

கிரிவலம் செல்வோர் இந்த சன்னதிக்கு கட்டாயம் சென்று வணங்குவது சிறப்பாகும்.

இறைவன் அனுப்பிய அதிகாரமூர்த்தியாக அங்கிருந்து பக்தர்களுக்கு உதவுகிறார்.

மலை சுற்றுவதை பாதி வழியில் இருந்து தொடங்கவோ, பாதி வழியில் முடிக்கவோ கூடாது.

மிக வேகமாக கிரிவலம் வருதல் கூடாது. மெதுவாக சாதாரணமாக நடக்க வேண்டும்.

வழியில் பல மூலிகைகள் உள்ளதால் மூலிகை காற்றும் நம் மீது பட வேண்டும்.

அதனை முகர்ந்து கொண்டு செல்வது சிறப்பாகும். மலை சுற்றுவதை ஒரு தியானத்தை போல நிதானமாக மேற்கொள்ள வேண்டும்.

இடது ஒரமாகவே நடந்து செல்ல வேண்டும். தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், மறைந்த ஞானிகளும் அருவமாக மலை சுற்றுவதால் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இடது ஒரமாக நாம் மலை சுற்றுதல் வேண்டும்.

பேசிக் கொண்டு வராமல் தேவ நாமத்தை சொல்லிக்கொண்டு வருதல் நலம்.

அண்ணாமலையாருக்கு அரோகரா என்று இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டு செல்லலாம்.

முக்கியமாக மலை சுற்றுவோர், வழியில் எங்கும் உட்கார்ந்து ஒய்வெடுத்தல் கூடாது, இதை தவிர்க்க வேண்டும்.

வழியில் உள்ள சன்னதிகள், லிங்கங்கள் ஆகியவற்றை வணங்க வேண்டும்.

அடிக்கடி மலையை பார்த்தவாறு வணங்கி செல்வது சிறப்பாகும்.

முக்கிய இடங்களில் மலையை நோக்கி கீழே விழுந்து நமஸ்காரம் செய்வது மிகவும் சிறப்பு.

மலை சுற்றுவோர் அதனை முடிக்கும் போது ஈசானியம் வழியாகத்தான் வந்து முடிக்க வேண்டும்.

மலை சுற்றி முடிந்ததும் அருணாசலேஸ்வரரை வணங்கிய பின்னரே திரும்புதல் வேண்டும்.

மலை சுற்றி முடித்தவுடன் தூங்கக் கூடாது. குளிக்கவும் கூடாது.

குறிப்பாக தன்னந்தனியாக மலை சுற்றுவது மிகவும் நல்லது. ஏனெனில் அது மவுனத்தை ஏற்படுத்தும்.

தெய்வீக தரிசனம் சிதையாது செல்வதற்கு உதவும். ஒருமித்த சிந்தனையை உண்டாக்கும்.

மலைவலம் சென்று சிவனின் அருளை பெறுவோம்.

Similar News