ஆன்மிக களஞ்சியம்

காசி கையைக்கு நிகரான "சோளிங்கர் நரசிம்மர்"

Published On 2024-10-16 11:08 GMT   |   Update On 2024-10-16 11:08 GMT
  • பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும்.
  • புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

ஒருநாள் தங்கி இருந்தாலே மோட்சம் தரக்கூடியது கடிகாசலம் என பெயர் கொண்டு விளங்கும் சோளிங்கர் திருத்தலம்.

பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆசாரியார்களில் ஸ்ரீமந்தநாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ஸ்ரீ ராமானுஜம், மணவாள மாமுனி போன்றோர் மங்களா சாசனம் செய்த பெருமையும் பெற்ற ஸ்தலம் இது.

அமைவிடம்

சென்னை & பெங்களூர் ரெயில் வழியில் அரக்கோணத்தில் இருந்து மேற்கே 27 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னை & திருப்பதி ரெயில் மார்க்கத்தில் திருத்தணியில் இருந்து 27 கிலோ மீட்டர் மேற்கிலும் அமைந்துள்ளது.

வேலூரில் இருந்தும் சித்தூரில் இருந்தும் பஸ் வசதிகள் அதிகம்.

மலை அளவு

சோளிங்கர் என்று அழைக்கப்பட்டாலும் இதன் தெற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் கொடைபாளையம் என்கிற சிறு கிராமத்தில் தான் பெரியமலையும் சிறிய மலையும் அமைந்துள்ளது.

பெரிய மலையில் யோக நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது.

மலையின் நீளம் 200 அடி. அகலம் 150 அடி. உயரம் 750 அடி. கோவில் ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

சிறிய மலையில் ஸ்ரீயோக ஆஞ்சநேய சுவாமி கோவில் உள்ளது. நீளம் 150 அடி. அகலம் 250 அடி. உயரம் 250 அடி. மொத்தம் 406 படிக்கட்டுகள். பரப்பளவு 1 ஏக்கர்.

ஊர் திருக்கோவில் அமைந்துள்ள இடத்தின் நீளம் 300 அடி, அகலம் 150 அடி.

பரப்பளவு இரண்டரை ஏக்கர், யோக நரசிம்ம சுவாமியின் உற்சவ பெருமாள் கோவில் சோளிங்கர் ஊரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

முதன் முதலில் பெருமாள் கோவிலின் பிரதிஷ்டை காலம் கி.பி. 1588.

தலச் சிறப்பு

பில்லி சூனியம், தீராவினை, மனக்குறை ஆகியவற்றால் துன்புறுவோர் இங்கு வந்து சேவை புரிந்தால் துயரம் சூரியனைக் கண்ட பனிபோல் கரையும்.

புராணத்திலேயே இந்த தலம் காசி, கயைக்கு நிகரானது என்று போற்றப்பட்டுள்ளது.

ஊர் பெருமாள் கோவிலில் பாரிஜாத மரம் ஒன்றும் முன்பு இருந்தது, சிறிய மலையில் அசோக மரம் உள்ளது.

அதன் கீழே குளம் அமைந்துள்ளது. பெரிய மலையில் உள்ளே நுழையும் போது அழகிய கோபுரம் நம் விழிகளை அகல விரிக்க வைக்கும்.

Similar News