ஆன்மிக களஞ்சியம்

ஜீவ ஆத்மாவும் பரமாத்மாவும் வேறல்ல!

Published On 2024-08-29 11:12 GMT   |   Update On 2024-08-29 11:12 GMT
  • உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது.
  • அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன.

அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது.

உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது.

அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான்.

நாம் காண்கின்ற எல்லா வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.

இதை சில உதாரணங்கள் மூலம் சொன்னால் நன்றாக விளங்கும்.

திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம்.

வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா?

திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?

எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே அல்லவா?

அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே அல்லவா?

அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.

Tags:    

Similar News