ஆன்மிக களஞ்சியம்

சீரடியில் பார்க்க வேண்டிய இடங்கள்-மகல்சபாதி இல்லம்

Published On 2024-09-11 11:00 GMT   |   Update On 2024-09-11 11:00 GMT
  • சீரடியில் சாய்பாபாவுடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் உள்ளன.
  • அங்கும் சென்று பார்த்தால்தான் உங்களது சீரடி பயணம் முழுமை பெறும்.

சீரடி தலத்தில் சமாதி மந்திர், குருஸ்தான், லெண்டித் தோட்டம், துவாரகமாயி, சாவடி ஆகிய இடங்களில் தரிசனம் செய்து முடித்ததும் சீரடி பயணம் முடிந்து விட்டதாக நினைக்காதீர்கள்.

சீரடியில் சாய்பாபாவுடன் தொடர்புடைய மேலும் சில இடங்கள் உள்ளன.

அங்கும் சென்று பார்த்தால்தான் உங்களது சீரடி பயணம் முழுமை பெறும்.

மகல்சபாதி இல்லம்

சாய்பாபாவுக்கு எத்தனையோ கோடி பக்தர்கள் உள்ளனர். ஆனால் பாபாவின் முதல் பக்தர் என்ற பெருமையைப் பெற்றவர் மகல்சாபதி.

கண்டோபா ஆலயத்தின் பூசாரியாக இருந்த இவர்தான் பாபாவை முதன்முதலில் ''சாயி'' என்று அழைத்தார் என்பதும், நாளடைவில் பாபாவுக்காக தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டு வறுமையை விரும்பி ஏற்றுக் கொண்டார் என்பதும் உங்களுக்குத் தெரிந்து இருக்கும்.

பாபா 1918&ம் ஆண்டு தெய்வமான பிறகு சுமார் 4 ஆண்டுகள் சீரடி தலத்தின் மேன்மைக்காக மகல்சாபதி பாடுபட்டார்.

1922&ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11&ந்தேதி மகல்சாபதி மரணம் அடைந்தார்.

அவரது உடலை வீட்டில் ஒரு அறையில் சமாதி வைத்துள்ளனர். பாபாவுக்கு தன்னலமற்ற சேவை செய்த காரணத்தால் இவரையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

மகல்சாபதி வீட்டில் பாபா அணிந்த காலணிகள், பிரம்பு, ஆடைகள், மற்றும் குப்னி ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

Similar News