ஆன்மிக களஞ்சியம்

சிவசக்தியான அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலம்

Published On 2024-10-25 10:38 GMT   |   Update On 2024-10-25 10:38 GMT
  • நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள்.
  • பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும்.

திருவண்ணாமலையில் தற்போதுள்ள பவழக்குன்று மலையில்தான் கவுதம மகரிஷியின் குடில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பவழக்குன்று மலையில் உள்ள கோவில் கருவறையில் அர்த்தநாரீஸ்வர் வடிவம் உள்ளது.

இதன் மூலம் அர்த்தநாரீஸ்வரர் தோன்றிய புனித தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.

இதை பக்தர்களுக்கு உணர்த்தவே ஆடி மாதம் ஆடிப்பூரம் தினத்தன்று தீமிதித்தல் விழா மிக சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருவதாக திருவண்ணாமலை ஆலய சிவாச்சார்யர்களில் ஒருவரான ரமேஷ் சிவாச்சார்யார் தெரிவித்தார்.

ஆலயங்களில் தீ மிதித்தலுக்கு ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.

ஆனால் திருவண்ணாமலையில் தீ மிதி விழா நடத்துவதில் தனி தத்துவம் அடங்கி உள்ளது.

சிவபெருமானுக்கு மொத்தம் 8 வடிவங்கள் உண்டு. அதில் ஒரு வடிவம் அக்னி வடிவம்.

இந்த அக்னி வடிவத்தில்தான் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

தீயில் இருந்து தோன்றிய அண்ணாமலையாரை நாம் சென்றடைய வேண்டுமானால் பராசக்தியான உண்ணாமலை அம்மனின் அருள் வேண்டும்.

பராசக்தி கருணை பார்வை பார்த்தால்தான் நாம் ஈசனின் பாத கமலங்களில் சரண் அடைய முடியும்.

நாமெல்லாம் சாதாரண ஜீவ ஆத்மாக்கள்.

பரமாத்மாவான ஈசனை அதாவது அக்னி வடிவில் இருக்கும் அண்ணாமலையானிடம் சென்றடைய வேண்டுமானால் அம்பாள் நமக்கு உதவ வேண்டும்.

அந்த உதவியைதான் தீ மிதித்தல் தினத்தன்று உண்ணாமலை அம்மன் நமக்கு செய்கிறாள்.

அதாவது தீ குண்டத்தில் அன்னை பராசக்தி எழுந்து அருள்பாலிக்கிறார்.

அந்த தீயின் மீது பக்தர்கள் நடந்து செல்லும்போது முக்திக்கான பாதை கிடைக்கிறது.

இதனால்தான் திருவண்ணாமலை சுற்றுப்பகுதி வட்டாரத்தில் இந்த தீ மிதித்தலை, "தீ-விரத-சத்திநிபாதம்" என்று சொல்வார்கள்.

உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு நடைபெறும் தீமிதித்தலில் திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த 7, 8 கிராம மக்கள் பங்கேற்று தீ மிதிப்பார்கள்.

அவர்கள் அனைவரும் குயவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

வேறு யாரும் அன்று தீ மிதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

திருவண்ணாமலை தலத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாக இந்த தீமிதித்தல் விழா நடந்து வருகிறது. சுமார் 300 பேர் தீ மிதிப்பார்கள்.

உண்ணாமலை அம்மனை வேண்டி விரதம் இருந்து அவர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் அவர்களுக்கு சந்தனம் பூசி பரிவட்டம் கட்டி சிறப்பு செய்யப்படும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் இது பாரம்பரிய சிறப்பு போல நடந்து வருகிறது.

அருணகிரி நாதருக்கும் அப்படியொரு பாரம்பரிய உற்சவத்தை நடத்தி வருகிறார்கள்.

Similar News