ஆன்மிகம்

உறவுக்கரம் நீட்டிய இயேசு

Published On 2018-05-14 04:26 GMT   |   Update On 2018-05-14 04:26 GMT
இறைதந்தையிடம் மனிதனின் பாவத்திற்கு பரிகாரமானார். மனித இனத்தையே இறையோடு மீண்டும் இணைத்தார். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து இன்றும் வாழ்கிறார்.
கடவுள், மனிதனை மண்ணால் உருவாக்கி, தன் உயிர் மூச்சை ஊதி உயிருள்ளவனாக ஆக்கினார். அவனுக்கு உற்றதுணையாக ஏவாளை படைத்து பரிசாக்கினார். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். இந்த நிலையில் இறைவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அவரை மாட்சிமைப்படுத்த வேண்டிய மனிதன், சாத்தானின் குரலுக்கு செவிமடுத்து, தன்னை படைத்த கடவுளின் திட்டத்தை எதிர்த்தான். அதனால் பாவ இருள் பற்றிக்கொண்டது. ஆதி மனிதன் மட்டுமல்ல, அவன் வழி வந்த மனித இனம் முழுவதும் கடவுள் கொடுத்த மேன்மையை இழந்தது. அதனாலேயே கடவுளின் உறவு தூரமானது.

இந்தநிலையில் இருந்த, பாழ்பட்டு போன மனிதத்தை தேடி வந்த தெய்வம் தான் இயேசு. அவர், நம்மை கடவுளோடு ஒப்புறவாக்கி, இறை உறவிலே மீண்டும் இணைத்து, இழந்து போன மனித மாண்பை வழங்க வந்தவர். இறைத்தந்தையின் அன்பை, மன்னிப்பை, வல்லமையை மக்களுக்கு நற்செய்தியாக அறிவித்து மனம் திரும்புதலுக்கும், இறையாட்சியின் மதிப்பீடுகளுக்கும் மக்களை அழைத்தவர். அவர், பாவிகளுக்கும், பாமரர்களுக்கும், வரிதண்டுவோர்க்கும், வலுக்குறைந்தோர்க்கும் உறவு கரம் கொடுத்து உதவியவர்.

அவர், பலருடைய மீட்புக்கு விலையாக தன் உயிரை கொடுக்கவே வந்தேன் என்றார். மானிட மகன் சிலுவையில் உயர்த்தப்பட வேண்டும், அப்போது அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலை வாழ்வு பெறுவர் என்பதை உணர்ந்தார். அதனால் மனமுவந்து சிலுவைச்சாவின் வேதனைக்கும், அவமானத்துக்கும் தன்னை கொடுத்தார். உயிரைக்கொடுத்து நம்மை மீட்டார். அதற்கு தனது விலை மதிப்பில்லா உயிரையும், ரத்தத்தையும் விலையாக கொடுத்தார்.

இறைதந்தையிடம் மனிதனின் பாவத்திற்கு பரிகாரமானார். மனித இனத்தையே இறையோடு மீண்டும் இணைத்தார். மரித்த மூன்றாம் நாள் உயிர்த்து இன்றும் வாழ்கிறார். தன் உயிரை விலையாக கொடுத்து நமக்கு நிலை வாழ்வு தந்தார். இயேசு போற்றி.

அருட்சகோதரி. மிரியம், அமலவை சபை,

சோபியா இல்லம், திண்டுக்கல்.  
Tags:    

Similar News