ஆன்மிகம்

தியாகம் செய்து வாழ்வோம்

Published On 2018-06-02 05:48 GMT   |   Update On 2018-06-02 05:48 GMT
இயேசு தன்னை தாழ்த்தி கொண்டு, சிலுவைச்சாவை ஏற்றார். அது எதற்காக? நாம் வாழ்வு பெற, நம்மை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
இயேசு, சாவை ஏற்கும் அளவுக்கு அதுவும் சிலுவைச்சாவை ஏற்கும் அளவுக்கு கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். (பிலிப் 2:6)

நாம் வாழ்வதற்கும், வாழ வைப்பதற்கும் தான் படைக்கப்பட்டிருக்கிறோம். வாழ்வதற்காக வரம், அருள் ஆகியவற்றை இறைவனிடத்தில் நாள்தோறும் பெறுகிறோம். அதனை பிறரோடு பகிர்ந்து, அவர்களையும் வாழ வைக்க வேண்டும் என்பதே தவக்காலத்தின் நோக்கம் ஆகும். அதற்கு, ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்‘ என்ற முதுமொழி மிகவும் பொருத்தமானது. நம்மை பிலிப்பயரின் இறைவார்த்தையோடும், முதுமொழியோடும் இணைத்து பார்ப்போம்.

இயேசு தன்னை தாழ்த்தி கொண்டு, சிலுவைச்சாவை ஏற்றார். அது எதற்காக? நாம் வாழ்வு பெற, நம்மை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். நம்மை, பிறர் முன் தாழ்த்திக்கொள்ள முடிகிறதா? பிறரை வாழ வைக்க நம்மை இழக்க முடிகிறதா? பணம், பதவி, பட்டம், புகழ், நான், தன் குடும்பம் என்று மட்டும் வாழ்ந்தால் போதும் என்றிருக்கிறோம். அடுத்தவர் பற்றி கவலைப்படுவதில்லை. அறிவு, ஞானம், அருள், பொருள் என பல செல்வங்களை இறைவன் நமக்கு தாராளமாக வழங்கிய போதும், அதை பிறரோடு பகிர்ந்து கொள்ள நமக்கு மனமில்லை.

பணம், வழிகாட்டுதல், பரிந்து பேசுதல், உடனிருந்து நேரத்தை செலவிடுதல் போன்ற சிறு உதவியை ஒருவருக்கு செய்தால், அவர் வாழ்வில் முன்னேறுவார் என்பதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அவர் நம்மை விட உயர்ந்து விடுவாரோ? என்ற அச்சத்தால் அந்த உதவியை செய்ய மாட்டோம். பொறாமை, சுயநலம் போன்ற அற்ப குணங்கள் தான் அதற்கு காரணம். நம்மில் உதவியை பெற்றவர் வாழ்வில் உயர்ந்தால், அவர் வழியே நமக்கும் உயர்வு கிட்டும் என்பதை உணர மறுக்கிறோம்.

நாம் வாழாவிட்டாலும் பரவாயில்லை. அடுத்தவன் வாழ கூடாது என்ற கெட்ட குணம் பலரிடம் உள்ளது. இதைத்தான் இயேசு சாடுகிறார். ‘நீங்களும் நுழைவதில்லை. நுழைவோரையும் தடுக்கிறீர்கள்’ (லூக் 11:52), என்பதுடன், ‘உன்மீது அன்பு கூர்வது 6போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக’ (மாற்கு 12:31) என்கிறார். இந்த இறை வசனங்கள் இன்று நமக்கு சொல்ல விரும்புவதும் இதைத்தான். எனவே, தன்னை தாழ்த்தி பிறருக்காக தியாகம் செய்து வாழ்வோம்.

அருட்சகோதரி.இ.சவரி, அமலவை சபை, திண்டுக்கல். 
Tags:    

Similar News