ஆன்மிகம்

துன்பத்தை எதிர்க்கும் தைரியம்

Published On 2018-06-09 03:06 GMT   |   Update On 2018-06-09 03:06 GMT
தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும்.
ஒவ்வொரு நாளும் நாம் பல விதமான பிரச்சினைகளை சந்திக்கிறோம். சிலவற்றுக்கு தீர்வும், பலவற்றுக்கு விடையும் கிடைப்பதில்லை. அதனால் நாம் கவலைப்படுகிறோம். நம் நிம்மதி குலைந்து விடுகிறது. ஒருவர் நடக்கையில் சில குரங்குகள் துரத்த அவர் வேகமாக நடக்க முற்படுகிறார். குரங்குகள் அவரை நெருங்கும் போது, ஒரு பெரியவரின் குரல் கேட்டது.

“ஓடாதே. எதிர்த்து நில்“. ஓடியவர் திரும்பி எதிர்த்து நிற்க வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன குரங்குகள். நமக்கு வருகிற துன்பங்கள், சவால்கள், எதிர்ப்புகள் கூட இப்படி குரங்குகள் போன்றவை தான். எதிர்த்து நின்றால் ஓடிவிடும். இயேசுவுக்கும் எதிர்ப்புகள் பல வடிவங்களில் வந்தன. உண்மையை பேசி, தவறு செய்தவர்களை எதிர்த்து நின்று, உழைக்கும் வர்க்கத்தை சுரண்டிய, அன்றைய யூத தலைவர்களை தனிமனிதனாக சத்தியத்தின் வழியில் நின்று சத்தமாக குரல் கொடுத்தார் இயேசு.

வெளியில் நடமாட முடியாதவாறு அவரை கொலை செய்ய யூத தலைவர்கள் திட்டம் வகுத்தனர் (யோவான் 7:1-2). பிரச்சினைகள், துன்பங்கள், மிரட்டல்கள் எந்த வடிவில் வந்தாலும் நாம் பயப்படவேண்டியதில்லை. தப்பித்து ஓட எண்ண வேண்டியதில்லை. அவற்றை பகுத்துப் பார்த்து தனிமனித அறத்தின் வழிநின்று எதிர்த்து நின்றால், நாமும் இயேசுவை போல் துன்பத்தை எதிர்க்கும் தைரியத்துடன் செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பதை அறிந்து இத்தவக்காலத்தில் செயல்பட வேண்டும்.

- வில்லியம், பங்குத்தந்தை, தூய லூர்து அன்னை ஆலயம், வடகரை.
Tags:    

Similar News