ஆன்மிகம்

கடவுள் மீது நம்பிக்கைக் கொள்ளுங்கள்

Published On 2018-07-28 03:12 GMT   |   Update On 2018-07-28 03:12 GMT
“நம்பிக்கை” ஒரு மாபெரும் ஆற்றல், பலம் வாய்ந்த சிறந்த ஆயுதம். நம்பிக்கை இருந்தால் மலையையும் பெயர்க்கலாம், மாமரத்தையும் வீழ்த்தலாம், நினைப்பதை நிகழ்த்தலாம், வேண்டுவதைப் பெறலாம்.
அன்றொரு நாள் மாலைப்பொழுதில் ஆண்டவர் இயேசு படகில் இருந்து மக்களுக்குப் போதித் தார். போதித்து முடிந்தவுடன் தம்மை சூழ்ந் திருந்த பெருந்திரளான மக்கள் கூட்டத்தை அனுப்பி விட்டு, தம் சீடர்களோடு படகில் அக்கரைக்குப் புறப்படு கிறார். அவருடன் வேறு படகுகளும் சென்றன.

களைப்பின் மிகுதியால் இயேசு படகின் பிற்பகுதியில் தலையணை வைத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது பெரும்புயல் அடிக்கவே, கொடூரமான அலைகள் படகின் மேல் மோதி படகை கடுமையாக அசைத்தது, படகுக்குள் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.

பயணித்த சீடர்கள் மிகவும் அஞ்சி நிலைகுலைந் துப் போனார்கள். அவர்கள், ‘போதகரே, சாகப்போகி றோமே, உமக்கு கவலையில்லையா?’ என்று சொல்லி இயேசுவை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் கடலையும் அதட்டுகின்றார். காற்று அடங்கிட பெரும் கொந்தளிப்பு நீங்கி நிசப்தமான சூழல் நிலவுகின்றது.

இயேசு தன் சீடர்களை நோக்கி, ‘ஏன் அஞ்சுகிறீர்கள்?, உங்களு க்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ என்று கேட்டார். அவர்கள் அவர் மீது பேரச்சம் கொண்டவர்களாய், ‘காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகிறதே’ என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இந்நிகழ்ச்சி தூய மாற்கு நற்செய்தியில் 4:35-41 வரையுள்ள திருமறைப் பகுதிகளில் காணப் படுகிறது. சிற்சில மாற்ற ங்களுடன் மத்தேயு, லூக்கா, ஆகிய இரு நற்செய்தி நூல்களிலும் காணப்ப டுகிறது.

இந்நிகழ்ச்சி இயேசு கிறிஸ்து திருச்சபைக்கு மட்டுமல்ல, அனைத்து படைப்புக்கும் அவர் ஆண்டவர் என்ற உண்மையை வெளிப்படுத்துகின்றது.

இயேசு படகில் ஏறச் சீடரும் பின் சென்று ஏறினார்கள். படகு இறையரசாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது என்பது உறுதி. அதற்குள் இயேசு முந்தி செல்லுகின்றார். சீடரது பணி அவருக்குப் பின்செல்வதே என்ற கருத்துத் தொனிக்கின்றது.

இயேசுவோடு இருந்த சீடர்கள்

‘ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?’ என்ற கேள்வியை இயேசு தம் சீடர்களைப் பார்த்து கேட்பதற்கு பல அடிப்படைக் காரணங்கள் உண்டு.

மற்ற மக்களை விட இயேசுவின் சீடர்கள் பல சிறப்புத் தன்மைகளை பெற்றவர்கள்.

முதலாவது, சீடர்கள் இயேசுவின் திருப்பணியில் இணைந்து செய்யும்படியாக, அவரின் பரமேறுதலுக்குப் பின் அவரின் திருப்பணியைத் தொடரும்படியாக அவரால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்.

இரண்டாவது, ஆண்டவர் இயேசுவின் கருத்தாழமிக்க போதனைகளை மிக அருகில் அமர்ந்து, அதிக கவனமாய்க் கேட்டவர்கள்.

மூன்றாவது, ஒரு நல்ல தோழனைப் போன்று, சகோதரனைப் போன்று, உறவினரைப் போன்று இயேசுவோடு உண்டு, உறங்கி, பயணித்து, அன்பு பாராட்டி இணைந்து வாழ்ந்தவர்கள். இயேசுவோடு நெருங்கிப் பழகியவர்கள்.

நான்காவது, இயேசு செய்த மாட்சிமிகு அற்புதங்களை நேரில் கண்டவர்கள். ‘கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் தீயஆவி பிடித்தவரைக் குணப்படுத்தியதையும்’ (1:21-28), ‘சீமோன் பேதுரு வின் மாமியாரின் காய்ச்சலை குணமாக்கியதையும்’ (1:29-31), ‘கொடிய தொழுநோயாளியின் நல மடையச் செய்ததையும்’ (1:40-45), ‘கை சூம்பியவரை குணப்படுத்தியதையும்’ (3:1-5) கண்டவர்கள்.

நம்பிக்கை குன்றிய சீடர்கள்

ஆண்டவர் இயேசுவின் இத்தனை ஆற்றல்மிகு அற்புதங்களைக் கண்டபடியால் இயல்பாகவே அவர் மீது அளப்பரிய நம்பிக்கை வைக்க வேண்டியவர்கள், அதற்கு மாறாக நம்பிக்கை குன்றியவர்களாய் அஞ்சினார்கள். தீய ஆவியையும், கொடிய வியாதிகளையும், பிறவி குறைபாடுகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றலை கண்டு கொண்டார்கள்.

ஆனால் இயற்கையையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் அவருக்கு உண்டு என்பதை அவர்களால் நம்பமுடியாமற் போயிற்று. இதன் பிரதிபலிப் பாகத் தான் அவர்களின் ஆச்சரியத் தையும், பேரச்சத் தையும், “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்படிகின் றனவே! இவர் யாரோ?” என்ற கேள்வியையும் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆனால் ஆண்டவர் இயேசுவின் கருத்துப்படி இந்த ஆச்சரியமும், வினாவும் தேவையற்றது. ஏனெனில் இயற்கையின் சக்திகள் கடவுள் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரின் ஆளுமைக்கும் அடங்கியவையே. இதனால் தான் நம்பிக்கையுள்ளவர்கள் ஒரு மலையையும் இடம் பெயர்ந்து அகலும்படிக் கட்டளையிடக்கூடியவர் என்கிறார் ஆண்டவர் (மத்தேயு 21:21).

கடவுளிடம் நம்பிக்கைக் கொள்ளுங்கள்

“நம்பிக்கை” ஒரு மாபெரும் ஆற்றல், பலம் வாய்ந்த சிறந்த ஆயுதம். நம்பிக்கை இருந்தால் மலையையும் பெயர்க்கலாம், மாமரத்தையும் வீழ்த்தலாம், நினைப்பதை நிகழ்த்தலாம், வேண்டுவதைப் பெறலாம்.

கடலின் கொந்தளிப்புகள் போல் வாழ்வில் எழும் போராட்டங்களை நினைத்து அச்சமடையாமலும், ஐயமுறாமலும், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார்” என்ற துணிவுடன், “எனக்கு வலுவூட்டுகின்றவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு” (பிலிப்பியர் 4:13) என்ற தெளிவுடன் கடவுள் மீது முழுமையாய் நம்பிக்கைக் கொள்வோம்.

நாம் நம்பினால் கடவுளின் மாட்சிமையைக் காண்போம்.

அருட்பணி.ம. பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை. 
Tags:    

Similar News