ஆன்மிகம்

துன்ப நேரங்களில் கடவுளின் கரங்களைக் காண்பவர்களா நாம்?

Published On 2018-10-11 03:28 GMT   |   Update On 2018-10-11 03:28 GMT
நம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம்.
ஒரு விவசாயி பாடுபடுகிறார் என்றால் அவர் கடினப்பட்டு உழைக்கிறார் என்பது பொருள். ஒரு வீரன் பாடுபடுகிறான் என்றால் அவன் கடின பயிற்சிகளை மேற்கொள்கிறான் என்பது புலனாகிறது. இதேபோன்று ஒவ்வொரு தொழிலிலும் பாடுகள் உண்டு. பாடுகள் என்றால் இங்கே துன்பங்கள் அடங்கிய வெற்றி பாதைகள் என்பதை புரிந்துகொள்கிறோம்.

ஏசு தன் பணியின் சூழலில் பல பாடுகளைபட்டார். பல அவமானங்களை மேற்கொண்டார். ஏசுவின் பாடுகள் அவருடைய பணிகளின் நிறைவாகவும், மீட்பின் வழிகளாகவும் அமைந்தன. கடவுளின் திட்டத்தை நிறைவேற்றவே அவர் பாடுகள் பட்டார். “தந்தை எனக்கு அளித்த துன்பக்கிண்ணத்தில் இருந்து நான் குடிக்காமல் இருப்பேனா? (யோவான் 18:11)” என்றார்.

நாம் எவ்வாறு நம்முடைய துன்ப நேரங்களில் செயல்படுகிறோம்? துன்பங்களை கண்டு துவண்டு போகிறோமா? தோல்விகளைக் கண்டு ஓடி ஒளிந்து விடுகிறோமா? வறுமையையும், வியாதிகளையும் கண்டு வாடிவிடுகிறோமா? இந்த துன்ப நேரத்தில் கடவுள் நம்மோடு இருக்கிறார். நம்மை கைவிடமாட்டார். ஏசுவின் பாடுகளும் மரணமும் பரமத்தந்தையின் விருப்பமாகவும் திட்டமாகவும் மீட்பின் வரலாற்றில் இடம் பெறுகின்றன.

நம்முடைய துன்பங்களும் தோல்விகளும் கடவுளின் விருப்பம் என்று உணர்ந்து அவைகளை ஏற்றுக்கொண்டு வாழும்போது நாமும் கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கிறோம். துன்பங்களின் நேரங்களில் கடவுளைவிட்டு வெகுதூரம் சென்று விடாமல் அவரின் கரங்களைப் பற்றிக்கொண்டு பின்பற்றுபவர்களாக வாழ்வோம்.

-அருட்தந்தை சி.குழந்தை, காணியிருப்பு 
Tags:    

Similar News