ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: இரும்பு வேலி

Published On 2019-03-27 03:43 GMT   |   Update On 2019-03-27 03:43 GMT
லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்
ஒரு பெரிய கிராமம் முழுவதும் ஒரு பெரும் பணக்காரருக்கு சொந்தம். அவருக்கு 2 மகன்கள். இவர் இறக்கும் முன் தனது சொத்துக்களை சமமாக பிரித்துக் கொடுத்தார். அவருடைய மகன்கள் பல வருடங்கள் ஒற்றுமையாக இருந்தனர். அவர்களின் வீடுகள் மிக அருகில் இருந்தது. ஒரு நாள் ஏற்பட்ட சின்ன வாக்குவாதம் பெரிய கலகத்தில் முடிந்தது. கிராமம் இரண்டாக பிரிந்தது. விவசாயம், தொழில், உற்பத்தி உறவுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டன.

பகை தீ பயங்கரமாக கொளுந்துவிட்டு எரிந்தது. ஒரு அதிகாலையில் மூத்தவரின் வாசலில் ஒரு தொழிலாளி வந்து நின்றார். ஐயா மிகவும் வருமையால் வாடுகிறேன். ஏதாவது வேலை தாருங்கள் என கேட்டார். உனக்கு மர இரும்பு வேலி அமைக்கத் தெரிந்தால் சொல். எனது சகோதரனின் முகத்தை நான் பார்க்க விரும்பவில்லை. எனவே அவன் வீட்டுக்கும் எனது வீட்டுக்கும் இடையே மர இரும்பு வேலி அமைத்து விடு என கூறினார். தொழிலாளி ஒத்துக்கொண்டார். மர இரும்பு வேலி அமைக்க தூண்கள், மரம், இரும்பு கம்பிகள், ஆணிகள் ஆகியவற்றை தொழிலாளி கேட்டார்.

மறு நாள் வண்டியில் அனைத்து பொருட்களும் வந்து இறங்கியது. அண்ணன் தான் என்ன செய்ய போகிறேன் என்பதை தம்பி நாளைக்கு பார்த்து புரிந்துகொள்வான் என கர்வம் கொள்கிறான். தம்பி தன் அண்ணன் என்ன செய்யபோகிறான் என யோசித்து அவன் என்ன செய்தாலும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பேன் என கர்வம் கொள்கிறான்.

தொழிலாளி நடு இரவில் வேலையை செய்து முடித்துவிட்டு போய் படுத்துக்கொண்டார். காலையில் அண்ணன் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அங்கே வேலிக்கு பதிலாக இரு வீட்டையும் இணைக்கும் ஓர் உறுதியான பாலம் கட்டப்பட்டிருந்தது. இவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாலத்தை தம்பி வந்து எட்டிப்பார்க்கிறான். பார்த்தவுடன் அண்ணன் என்மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறான் என நினைத்து பாலத்தின் மறு பக்கம் ஏறி நின்று கண்கலங்கினான்.

அவன் கண்ணீரை கண்ட அண்ணன் பாலத்தின் இப்பக்கம் ஏறி நடந்தான். தம்பியும் கை நீட்டிய வண்ணம் அண்ணனை நோக்கி வந்தான். இருவரும் பாலத்தின் மையத்தில் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டு நின்றார்கள். அந்த தொழிலாளியை அண்ணன் நன்றியோடு தேடுகிறான்....

அந்த தொழிலாளியோ வேலை களைப்பால் இவர்களுக்கு நேர் கீழே பாலத்தின் அடியில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தார்.

லேவி:19:16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக: பிறனுடைய ரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம் நான் கர்த்தர்

நீதி மொழிகள் : 16:28 மாறுபாள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான். கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

நீதி மொழிகள்: 26:20 விறகில்லாமல் நெருப்பு அவியும், கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்

ஜேக்கப் மனோகரன் -கும்பகோணம்.
Tags:    

Similar News