ஆன்மிகம்

தவக்கால சிந்தனை: உபவாசத்தில் மனமாற்றம்

Published On 2019-03-29 03:35 GMT   |   Update On 2019-03-29 03:35 GMT
இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது.
கடவுளுக்கும் நமக்கும் மிக நெருக்கமான உறவு ஏற்பட்டு மனமாற்றத்தை நாம் பெற வேண்டி தங்களையே தயார்படுத்திக்கொள்ளக்கூடிய காலம் தான் இந்த தவக்காலம். இந்த மனமாற்றத்தை பெற நாம் என்ன செய்யவேண்டும் என்று சற்று தியானித்து பார்ப்போம்.

இந்த தவக்காலத்தில் சிலர் நான் சாப்பிடாமல் உபவாசம் இருக்கிறேன். நீங்கள் எப்படி? என்று கேள்வி கேட்டுக்கொள்வார்கள். இன்னும் சிலர் நான் பல்வேறு கெட்ட பழக்கங்களை விட்டு விட்டேன். இந்த 40 நாட்களிலாவது அதை செய்யாமல் இருக்கிறேன் என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் பேசி விட்டு பின்னர் லெந்து நாட்கள் முடிந்தவுடன் தீய பழக்கங்களை மீண்டும் ஆரம்பித்து விடுவார்கள்.

எனவே உபவாசம் இருப்பது என்றால் 3 வேளை உணவை ஒருமுறை, இரண்டு முறை அல்லது மூன்று முறையும் சாப்பிடாமல் இருப்பது, இன்னும் சிலர் தீய பழக்கங்களில் இருந்து விலகி இருப்பது மட்டுமல்ல, ஆத்ம தியாகத்துடன் உபவாசம் இருக்க வேண்டும். இதைத்தான் இயேசுவும் கல்வாரி சிலுவையில் பாடுகளை அனுபவிக்கும் முன்பு உபவாசம் இருந்து தன் ஆத்மாவை தேவனிடத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தார் என்று வேதாகமத்தில் கூறப்பட்டு உள்ளது. எனவே ஆத்ம தியாகம் என்றால் தினமும் வேதம் வாசிக்க வேண்டும். கடவுளிடம் தினமும் நம்முடைய வேண்டுதல்களை ஜெபம் செய்ய வேண்டும். அவர் நமக்காக கல்வாரி சிலுவையில் பட்ட கஷ்டங்கள் குறித்து ஆராய வேண்டும். நம்முடைய இதயத்தை கடவுளுக்கென்று மாற்ற வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் நாம் கடைபிடித்தால் கடவுள் நமக்கு நல்ல மனமாற்றத்தை தர வல்லவராய் இருக்கிறார்.

இப்படி செய்யாமல் நான் இந்த 40 நாட்கள் மட்டும்தான் உபவாசம் இருப்பேன், தீய பழக்கங்களை விட்டு விடுவேன். பின்னர் திரும்பவும் பழைய மனிதாக மாறி விடுவேன் என்பது அல்ல. இந்த தவக்காலத்தில் நம்முடைய வாழ்க்கையை மாற்றவும், கடவுளுக்கு ஏற்றதாக நம்முடைய இதயத்தை மாற்றவுமே இந்த நாட்கள் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்து போகக்கூடாது. எனவே நம்முடைய மனதில் மாற்றம் அடைந்து கிறிஸ்துவுக்குள்ளாய் வாழ தேவன்தாமே நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

சகோ.ஜான்பீட்டர், ராக்கியாபாளையம், திருப்பூர்.
Tags:    

Similar News