மயிலாப்பூர் கபாலீஸ்வரர் உடனுறை கற்பகாம்பாள் திருக்கோவில்
- இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.
- திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில்.
கபாலீஸ்வரர் திருமாலை
மூலப் பரம் பொருளே முக்கண்படைத்த முழு முதல்வன்
ஆலக் கணத்தியுள் ஞான சம்பந்தர் அருள் மொழியிற்
சாலப் புகுந்தவன் பூங்கோதை வாழ்வு தழைவித்தவன்
காலக் கடவுள் மயிலா புரியிற் கபாலியன்றே
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீசுவரர் கோவில் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
மயிலாப்பூர் பகுதியில் மயிலாப்பூர் காரணீசுவரர் கோவில், திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோவில், மயிலாப்பூர் விருபாட்சீசுவரர் கோவில், மயிலாப்பூர் வாலீசுவரர் கோவில், மயிலாப்பூர் மல்லீசுவரர் கோவில். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் எனப்படுகின்ற சப்த சிவத்தலங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்பர். இவை ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்துள்ளன.
இவற்றைச் சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கவுதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர். இந்த சப்த ஸ்தான சிவாலயங்களின் வரிசையில் ஒரு சிவாலயமாக கபாலீஸ்வரர் கோவில் சிறப்பு பெற்றுள்ளது.
இங்குள்ள சிவனின் பெயர் கபாலீசுவரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது.
இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ள பகுதி மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை ஆண்ட பல்லவர் காலத்தில் சைவ சமய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், மயிலை கபாலீசுவரர் மீது தேவாரப் பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர் இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையில் இருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோவில் கட்டப்பட்டது.
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசர் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் பாம்பு தீண்டி அப்பெண் இறந்து போகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார்.
சம்பந்தர் மயிலாப்பூர் வந்த போது, சிவனேசர் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப்பாத்திரத்தைக் கபாலீசுவரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோவிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. இன்றைய கபாலீசுவரர் கோவிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோவில் இருப்பதைக் காணமுடியும்.
திருமுறைத் தலங்களின் பட்டியலில் 24-வது திருமுறை தலமாகத் திகழ்கிறது இந்த கோவில். திருஞானசம்பந்தர், ஐயடிகள் காடவர்கோன் ஆகிய நாயன்மார்களின் பாடல் பெற்ற திருத்தலம் இது. பெரிய புராணம் போன்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்திற்கான திருப்புகழ் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் அவதரித்த திருத்தலம் இது.
பார்வதி அன்னை சிவபெருமானை நோக்கி, மயில் வடிவில் இருந்த நான் உங்களை வழிபட்ட இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வரவேண்டும். மயில் வடிவில் இருந்து இங்கே நான் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு மயில் தீர்த்தம் என்கிற பெயர் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனால் இத்தலத்திற்கு மயிலாபுரி என்கிற பெயர் வந்தது. மயிலாப்பூர் என்றாகி, மயிலை என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. பண்டைய புராண வரலாறுகளில் ஒன்று சிவன் பிரம்மாவை சபித்தது.
பிரம்மாவிற்குக் கோவில் கிடையாது என்றும், பிரம்மனுக்கு உதவியாகப் பொய்ச் சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூஜையில் சேர்க்கக்கூடாது என்றும் கூறிய சிவபெருமான். பைரவரை உருவாக்கி பிரம்மாவின் ஒரு சிரத்தை கொய்யச் சொன்னார். அதனால் ஐந்து தலைகள் பெற்றிருந்த பிரம்மா, நான்கு தலை கொண்டவராக ஆனார். அதன்பிறகு விமோசனம் வேண்டி சிவபெருமானைப் பிரம்மா வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
இங்கே சிவபெருமானை வழிபட்டு நான்காவது தலையை பெற்றார் பிரம்மா. நான்முகனான பிரம்மா, சிவபெருமானை நோக்கி, இத்தலத்தில் நான் உங்களை வணங்கியதாலும், நீங்கள் பிரம்ம கபாலம் ஏந்தியதாலும் இனி இத்தலத்திற்குப் பிரம்ம கபாலீஸ்வரம் என்றும், உங்களுக்கு கபாலீஸ்வரர் என்கிற பெயரும் வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்படியே ஆகட்டும் என்று சிவபெருமான் அருளினார். இத்தலத்தில் பிரம்மாவை வணங்கினால் நல்ல பலன் கிடைக்கும். இத்தலத்தில் சிவபெருமானை வேதங்கள் வணங்கின. ராமபிரான் ஜடாயுவிற்கு இறுதி கடமைகளைச் செய்த பின்பு, இங்கே வந்து கபாலீஸ்வரரை வணங்கினார். ராமபிரான் முடிசூட்டிக் கொண்ட பின்பு மீண்டும் இங்கே வந்து ஐப்பசி திருவோண விழாவில் கலந்துகொண்டு வழிபட்டார்.
முருகப்பெருமான் தாய் தந்தையரை வழிபட்டு பேறு பெற்றதால் சிங்காரவேலர் என்று போற்றப்படுவது போன்று, எண்ணற்ற சிறப்புகள் இத்தலத்திற்கு உள்ளன. இத்தலத்தில் அருள்கின்ற ஸ்ரீ கற்பகாம்பாள் அன்னை, நாம் கேட்டவைகளை கொடுப்பதோடு, கேட்க மறந்தவைகளையும் கொடுக்கிறாள்.
இக்கோவிலில் நடைபெறும் பங்குனி உத்திர விழாவில் அறுபத்து மூவர் விழா சிறப்பானது.
அதிலும் நாளை நடைபெறும் அறுபத்து மூவர் வீதி உலா மிக, மிக கோலாகலமானது. ஒரு முறை நேரில் அதை பார்த்து அனுபவித்தால் தான் அந்த மகிமை உங்களுக்கு புரியும்.