திருச்சியில் ஒரே இடத்தில்108 திவ்யதேச பெருமாள் தரிசனம்
- வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
- தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திவ்யதேச பெருமாளை தரிசனம் செய்யலாம்.
திருச்சியில் புரட்டாசி மாதத்தில் ஒரே இடத்தில் 108 திவ்யதேச பெருமாள் தரிசனம் நிகழ்வு பறவைகள் சாலையில் உள்ள வாசவி மகாலில் நேற்று தொடங்கி வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியை அஸ்வின் ஸ்வீட்ஸ் நிறுவனம், எஸ் டி.வி. நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இங்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், உறையூர் அழகியமணவாளன், அன்பில் சுந்தரராஜபெருமாள், உத்தமர்கோவில், திருவெள்ளறை, காஞ்சி வரதராஜபெருமாள், திருப்பதி, கபிஸ்தலம், திருவனந்தபுரம் பத்மநாபசாமி, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள், நாங்குநேரி வானமாமலை, ஸ்ரீவைகுண்டம், திருப்புளிங்குடி, இரட்டை திருப்பதி, ஆழ்வார் திருநகரி என்று தமிழகத்தில் உள்ள 84 திருத்தலங்கள், கேரளாவில் உள்ள 11 திருத்தலங்கள், ஆந்திராவில் உள்ள 2 திருத்தலங்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள 4 திருத்தலங்கள், உத்தராகாண்டில் உள்ள 3 திருத்தலங்கள், குஜராத், நேபாளத்தில் உள்ள தலா ஒரு திருத்தலம் மற்றும் வானுலகத்தில் உள்ள 2 திருத்தலங்கள் என்று 108 திவ்யதேசங்களில் அமைந்திருக்கும் பெருமாள், அங்கங்கு எப்படி எழுந்தருளி இருக்கின்றனரோ, அதுபோன்ற உருவ ஒற்றுமையுடன் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திவ்யதேச பெருமாள் தரிசனத்தை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.
மேலும் இந்த நிகழ்ச்சியையொட்டி வருகிற 8-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.