வீடு வாங்கும் யோகம் அருளும் `ஜலகண்டீஸ்வரர்'
- கோவிலை சுற்றி எட்டு திசைகளில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன.
- தேவாரப் பாடல் பெற்ற தலம்.
கோவில் தோற்றம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அஷ்டலிங்கங்களை பற்றி நாம் அறிந்துள்ளோம். அதுபோல தொண்டை நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற ஒரு தலம் திருவேற்காடு ஶ்ரீ பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரா் திருக்கோவில். இத்திருக்கோவிலை சுற்றி எட்டு திசைகளில் அஷ்டலிங்கங்கள் அமைந்துள்ளன.
ஒரு சமயம் அகத்திய மாமுனிவர் திருவேற்காடு தலத்திற்கு வருகை தந்தார். அப்போது சிவபெருமானை பாடி வணங்கிய போது சிவபெருமான் பார்வதி தேவியோடு அவருக்குக் காட்சி கொடுத்தார்.
அகத்தியர் வேண்டிய உடனேயே காட்சி கொடுத்த ஈசனிடம் பார்வதிதேவி, `மாமுனிவர்களும், மகரிஷிகளும் கேட்டதும் தாங்கள் திருக்காட்சியை அருளுகிறீர்கள். ஆனால் தங்கள் பக்தர்கள் தங்கள் திருக்காட்சியைக் காண விரும்பினால் அவர்களுக்கு அவ்வாறு நீங்கள் உடனே காட்சி தராமல் தாமதிக்கிறீர்களே அது ஏன்?' என ஒரு கேள்வியைக் கேட்டார்.
உடனே ஈசன் அனைத்து பக்தர்களும் வழிபட்டு தனது அருளைப் பெறுவதற்காக திருவேற்காடு பகுதியில் வேதபுரீஸ்வரர் திருத்தலத்தைச் சுற்றி எட்டு திசைகளிலும் அஷ்ட லிங்கத் திருமேனிகளை வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.
வள்ளிக்கொல்லைமேடு என்ற ஊரில் கிழக்கு திசைக்கான கோவிலான (இந்திரலிங்கம்) ஞானாம்பிகை சமேத இந்திரசேனா பதீஸ்வரர் திருக்கோவிலும்,
நூம்பல் என்ற கிராமத்தில் தென் கிழக்கு திசைக்கான கோவிலான (அக்னிலிங்கம்) ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் திருக்கோவிலும்,
சென்னீர்குப்பம் என்ற ஊரில் தெற்கு திசைக்கான கோவிலான (எமலிங்கம்) மரகதாம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோவிலும்,
பாரிவாக்கம் என்ற ஊரில் தென் மேற்கு திசைக்கான கோவிலான (நிருதிலிங்கம்) பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற திருக்கோவிலும்,
மேட்டுப்பாளையம் என்ற ஊரில் மேற்கு திசைக்கான கோவிலான (வருணலிங்கம்) ஜலகண்டீஸ்வரி சமேத ஸ்ரீஜலகண்டீஸ்வரர் திருக்கோவிலும்,
பருத்திப்பட்டு என்ற ஊரில் வட மேற்கு திசைக்கான கோவிலான (வாயுலிங்கம்) விருத்தாம்பிகை சமேத வாயுலிங்கேஸ்வரர் திருக்கோவிலும்,
சுந்தரசோழபுரம் என்ற ஊரில் வடக்கு திசைக்கான கோவிலான (குபேரலிங்கம்) வேம்புநாயகி சமேத குபேரேஸ்வரர் திருக்கோவிலும்,
சின்னகோலடி என்ற ஊரில் வட கிழக்கு திசைக்கான கோவிலான (ஈசானலிங்கம்) பார்வதி சமேத ஈசான லிங்கத் திருக்கோவிலும் அமைந்துள்ளன.
மேட்டுப்பாளையம் என்ற பகுதியில் அமைந்துள்ள வருணலிங்க தலமான ஜலகண்டீஸ்வரி சமேத ஜலகண்டீஸ்வரர் திருக்கோவில் எளிமையாக சிமெண்டு ஓடு கூரை வேயப்பட்ட ஒரு கோவிலாக அமைந்துள்ளது.
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலுக்கு மேற்கு திசையில் இத்தலம் அமைந்துள்ளது. மூலவர் ஜலகண்டீஸ்வரர், காசி விஸ்வநாதரைப் போல காட்சி தருகிறார்.
இத்தலத்து லிங்கம் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஈசனுக்கு முன்னால் நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். அருகில் பலிபீடம் அமைந்துள்ளது.
ஜலகண்டீஸ்வரருக்கு அருகில், ஜலகண்டீஸ்வரி என்ற திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் சதுர்புஜ நாயகியாக அம்பாள் காட்சி தந்து அருள்பாலிக்கிறார். கோவிலுக்கு வெளியில் விநாயகப்பெருமான் ஒரு சிறிய சன்னிதியில் காட்சி தருகிறார்.
ஜலகண்டீஸ்வரி உடனுறை ஜலகண்டீஸ்வரரை வழிபட்டால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் வந்துசேரும் என்பது ஐதீகமாக உள்ளது.
ஈசனின் சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து மனமுருகி வழிபட்டால் வீடு கட்டுவதில் உள்ள தடைகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
இத்தலத்தில் மாதப்பிரதோஷம், சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம் மற்றும் நவராத்திரி முதலான உற்சவங்கள் நடைபெறுகின்றன.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
சென்னை அருகே உள்ள பூவிருந்தவல்லி-ஆவடி சாலையில் சென்னீர்குப்பத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இத்தலம் அமைந்துள்ளது.
பூவிருந்தவல்லி - ஆவடி மார்க்கத்தில் செல்லும் 'எஸ் 50' என்ற சிற்றுந்தில் பயணித்து பாரிவாக்கம் எமரால்டு பார்க் என்ற நிறுத்தத்தில் இறங்கி இத்தலத்தை அடையலாம்.