- திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது.
- இன்று முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.
திருத்தணி:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடாக போற்றப்படும் முருகன் கோவில் மலைமேல் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் நடப்பு ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 2-ந்தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. முருக பெருமான் புஷ்ப அலங்காரம், பட்டு அலங்காரம், தங்கக்கவசம், திருவாபரணம், வெள்ளிக்கவசம், சந்தனகாப்பு உள்ளிட்ட அலங்காரத்தில் நாள்தோறும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
கந்த சஷ்டி விழாவின் 6-வது நாளான நேற்று அதிகாலை மூலவர் முருகபெருமான் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 6 டன் மலர்கள் அரக்கோணம் சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவடி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
மாலை 4.45 மணிக்கு முருகபெருமானுக்கு பல்வேறு மலர்களால் புஷ்பாஞ்சலியும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
கந்த சஷ்டி 6-வது நாளில் முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நடைபெறும். ஆனால் திருத்தணி முருகன் கோவிலில் மட்டும் புஷ்பாஞ்சலி நடக்கும். திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த முருகன் திருத்தணி மலையில் தான் சினம் தணிந்தார் என்பது ஐதீகம்.
அதனால் திருத்தணியில் முருகனின் சினம் தணிக்க புஷ்பாஞ்சலி நடத்தப்படுகிறது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு உற்சவர் முருக பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.