ஆன்மிகம்
விட்டல் சாமி கோவிலில் நேற்று பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

விட்டல் சாமி கோவிலில் ஆஷாடி ஏகாதசி திருவிழா இன்று நடக்கிறது

Published On 2016-07-15 03:12 GMT   |   Update On 2016-07-15 03:12 GMT
ஆஷாடி ஏகாதசி திருவிழாவையொட்டி விட்டல் சாமி கோவிலில் தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் பண்டர்பூரில் குவிந்துள்ளனர்.
சோலாப்பூர் மாவட்டம் பண்டர்பூரில் பிரசித்தி பெற்ற விட்டல் சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கிருஷ்ணர், ருக்மிணி தேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆஷாடி ஏகாதசி தினத்தன்று நடைபெறும் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஆஷாடி ஏகாதசி திருவிழா விட்டல் சாமி கோவிலில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதையொட்டி மராட்டியம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பண்டர்பூரில் குவிந்துள்ளனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள் கிருஷ்ணரின் பெருமைகளை போற்றும் பஜனை பாடல்களை இசைத்தபடி செல்கின்றனர். ஆஷாடி ஏகாதசியையொட்டி பண்டர்பூருக்கு மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சிறப்பு ரெயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

பண்டர்பூருக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் ரெயில் நிலையத்தில் இன்னிசை வாத்தியங்கள் முழங்க பஜனை பாடல்களை இசைத்தனர்.

இதற்கிடையே, ஆஷாடி ஏகாதசியையொட்டி மும்பை வடாலாவில் உள்ள விட்டல்சாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

Similar News