ஆன்மிகம்

அரியாங்குப்பம் கோவிலிலுக்கு புதிய தேர் செய்வதற்கான திருப்பணி

Published On 2016-09-17 03:23 GMT   |   Update On 2016-09-17 03:23 GMT
அரியாங்குப்பம் கோவிலிலுக்கு புதிய தேர் செய்வதற்கான திருப்பணி நேற்று பூஜைகளுடன் தொடங்கியது.
புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் திரவுபதியம்மன், விநாயகர், செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு தேர் ஒன்று உள்ளது. அந்த தேரானது தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் புதிய தேர் செய்வதற்கு இந்து சமய அறநிலைத்துறையிடம் கோவில் அறங்காவல் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

அதனடிப்படையில் புதிய தேர் செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை சுமார் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியது. மேலும் ஊர் மக்களிடமும் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் நன்கொடைகளும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் புதிய தேர் செய்வதற்கான திருப்பணிகள் நேற்று பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக விநாயகர் கோவிலில் முதல் பூஜையும், முருகர், சிவன் மற்றும் மாரியம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. புதிதாக செய்யப்படும் தேரில் விநாயகர் சிலை வைக்கப்படுகிறது. அதற்கு விநாயகர் சிலை செய்ய பயன்படும் மரத்துண்டுக்கு, சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனையும் காண்பிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டுவரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கோவில் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், புதிய தேர் செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள கமிட்டியின் தலைவர் விநாயகமூர்த்தி, அறங்காவல் குழு நிர்வாகிகள், தேர் கமிட்டி நிர்வாகிகள், பக்தர்கள், பெண்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News