வழிபாடு

ஆயிரம் கணபதி ஹோமம் செய்த பலன் தரும் விநாயகர் சதுர்த்தி

Published On 2024-09-06 08:54 GMT   |   Update On 2024-09-06 08:54 GMT
  • வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும்.
  • பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள்

முழு முதல் கடவுளாக கொண்டாடப்படக்கூடியவர் விநாயகப்பெருமான். எந்த ஒரு பூஜையாக இருந்தாலும், விரதமாக இருந்தாலும், யாகமாக இருந்தாலும், விநாயகரை வணங்கிய பிறகே தொடங்க வேண்டும் என்பது ஐதீகம். விஷ்ணு பகவானை வழிபடுவதை வைணவம்' என்றும், சிவபெருமானை வழிபடுவதை 'சைவம்' என்றும் சொல்வது போல, விநாயகரை பிரதான தெய்வமாக வழிபாடு செய்வதை 'காணாபத்யம்' என்று அழைப்பார்கள். ஒரு சமயம் சிவபெருமானும், பார்வதியும் திருக்கயிலாயத்தில் வீற்றிருந்தனர். அப்போது அங்கு பிரணவ வடிவிலான ஒரு உருவத்தை பார்வதியும், பரமேஸ்வரனும் நோக்க, அதில் இருந்து தோன்றியவர் விநாயகர் என்று சொல்லப்படுகிறது.

ஒரு முறை பார்வதி நீராடச் செல்லும் பொழுது, தன் உடலில் இருந்து பரிமளங்களை (வாசனை துகள்கள்) உருட்டி வைத்ததாகவும், அதில் இருந்து தோன்றியவரே விநாயகர் என்றும் சொல்கிறார்கள். அப்படி உருவான விநாயகரை பார்வதி தனக்கு காவலாக வைத்து விட்டு நீராடச் சென்றார். அந்த நேரம் பார்த்து கயிலாயத்திற்குள் நுழைந்த சிவபெருமானை, விநாயகர் தடுத்து நிறுத்தினார். இதனால் சிவனுக்கும் விநாயகருக்கும் சண்டை உருவானது. இதில் தன் சூலாயுதத்தால் விநாயகரின் தலையை கொய்தார், சிவபெருமான். அப்போது நீராடிவிட்டு வந்த பார்வதி, நடந்ததை புரிந்து கொண்டு, விநாயகரைப் பற்றி சிவபெருமானிடம் கூறினாள். இதையடுத்து வடதிசையில் தலைவைத்து படுத்திருந்த வெள்ளை யானையின் தலையை எடுத்து வந்து விநாயகரின் உடலில் பொருத்தி அவருக்கு ஈசன் உயிர் கொடுத்தார் என்றும் கூறுவாார்கள்.

விநாயகப் பெருமான் வழிபாடுகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, விநாயகர் சதுரவர்த்தி தர்ப்பணம், அஷ்ட திரவிய ஹோமம், வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் ஆகியவை. விநாயகர் விரதங்களில், சங்கடகர சதுர்த்தி பிரதானமாகத் திகழ்கிறது. அஷ்ட திரவியங்கள் என்பது கரும்பு, அவல், கொழுக்கட்டை, தேங்காய், எள், நெல்பொரி, சத்து மாவு, வாழைப்பழம் ஆகியவையாகும். அஷ்ட திரவிய ஹோமத்தில் கொழுக்கட்டையை முழுவதாகவும், அவல், பொரி, மாவு ஆகியவற்றை கைப்பிடி அளவிலும், கரும்பை கணு அளவிலும், தேங்காயை பிறை வடிவாகவும், எள்ளை உள்ளங்கை சுருங்கிய அளவும் எடுத்துக்கொண்டு, வாழைப்பழத்தை சிறியதாக இருந்தால் முழு அளவிலும், பெரியதாக இருந்தால் துண்டாக நறுக்கியும் சேர்க்கலாம். இந்த பொருட்களை எல்லாம் தேன், பால், நெய் ஆகியவற்றுடன் கலந்து, தனித்தனியாக ஹோமம் செய்வது விசேஷமானதாகும்.

வாஞ்சா கல்ப கணபதி ஹோமம் என்பது விரும்பியதை கொடுப்பதில் முன்னணியில் இருக்கக்கூடிய ஹோமம் ஆகும். இந்த ஹோமமானது, நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாக கூறுவார்கள். ஆனால் ஸ்ரீவித்யா மந்திர உபதேசம், கணபதி மந்திர ஜப சித்தி இல்லாமல் செய்வது பிரயோஜனம் இல்லை. குரு முகமாக கட்டாயம் இந்த மந்திரங்களை உபதேசமாக பெற வேண்டும். புரட்டாசி, ஐப்பசி மாத சுக்லபட்ச நவமி அன்று, ஜபத் துடன் கூடிய ஹோமத்தை செய்வது மிக விசேஷமானதாகும். இதை பாராயணம் செய்வது லட்சுமி குபேர அருளைக் கொடுக்கும். ஐந்து முறை பாராய ணம் செய்தால் உலகம் வசமாகும். 10 முறை பாராயணம் செய்தால் சர்வலோக வசீகரம் உண்டாகும். ஆனால் மந்திர சித்தி என்பது இதில் முக்கியமானதாக கூறப்படுகிறது.

பசு நெய் கொண்டு இந்த ஹோமம் செய்தால், வீட்டில் லட்சுமி தேவி நிரந்தர வாசம் செய்வாள். அன்னத்தால் ஆகுதி கொடுக்க அன்ன விருத்தியும், தேனால் ஆகுதி கொடுக்க தங்கமும் சேரும். பசும்பாலால் ஆகுதி கொடுக்க பசுக்கள் விருத்தி அடையும். பசுந்தயிரால் ஆகுதி கொடுக்க எல்லா பாக்கியங்களும் தேடி வரும். எள் கலந்த அரிசியால் ஹோமம் செய்ய வறுமை நீங்கும், கடன் தொல்லை விலகும். தாமரை பூவும், பசு நெய்யும் கொண்டு ஹோமம் செய்ய அசையாச் சொத்துக்கள் தேடி வரும். அரசு சமித்து கொண்டு ஹோமம் செய்ய ஜன வசீகரம் உண்டாகும். நொச்சி சமித்தால் ஹோமம் செய்ய வறட்சி விலகும். அருகம்புல்லால் ஹோமம் செய்ய எல்லாவித வியாதிகளும் விலகிச் செல்லும். நாயுருவியால் ஹோமம் செய்ய நவக்கிரகங்களும் வசமாகும். வெல்லம், வாழைப்பழம் மற்றும் பாயசத்தால் ஹோமம் செய்ய நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய செல்வங்கள் தேடி வரும்.

முக்கனியில் தேன் சேர்த்து ஹோமம் செய்ய சகலமும் வசீகரமாகும். தடைபட்ட திருமணங்கள் நடக்கும். தேவ தர்ப்பணம், ரிஷி தர்ப்பணம் போல் மகா கணபதியின் சதுரவர்த்தி தர்ப்பணம் மிக விசேஷமானதாகும். கணபதி மூல மந்திரத்தை கொண்டும் விசேஷ மந்திரங்களாலும் 444 முறை நீர் விடுதல் விசேஷமானதாகும்.

வாசனை கலந்த சுத்தமான தண்ணீரும், பஞ்சபாத்திரம் மற்றும் அரைத்த சந்தனம், நல்ல குங்குமம், ஒரு பித்தளை தாம்பாளம் போன்றவற்றை கொண்டு விநாயகப் பெருமானுக்கு இந்த தர்ப்பணத்தை செய்வார்கள். சிலர் கணபதி எந்திரத்தையும் சிலர், கணபதி விக்கிரகத்தையும் வைத்து செய்வதும் உண்டு. மாசி மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சம் அன்று, சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆரம்பிப்பார்கள்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தியில் இந்த விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவார்கள். இதில் ஆவணி மாதம் வளர்பிறையில் வரக்கூடிய சதுர்த்தி அன்று தான் விநாயகர் அவதரித்ததாக கூறப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கும் விநாயகர் விரதத்தால் (விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதால்), வருடம் முழுக்க விரதம் இருந்த பலனும், ஆயிரம் கணபதி ஹோமம் செய்த பலனும் கிடைக்கும். அன்றைய தினம் காலை எழுந்து களிமண்ணால் செய்த விநாயகரை பெரும்பாலும் பூஜிப்பார்கள். ஆனால் களிமண்ணால் செய்த விநாயகரை பூஜித்த மறுநாள், புனர் பூஜை செய்து விட்டு நீரில் கரைக்க வேண்டும்.

-'ஜோதிட சிம்மம்'

சுவாமி கண்ணன் பட்டாச்சாரியா.

Tags:    

Similar News