ஆன்மிகம்

பார்வதீஸ்வரசாமி கோவிலில் உமா மகேஸ்வர சமுத்திர தீர்த்தவாரி

Published On 2016-09-17 03:26 GMT   |   Update On 2016-09-17 03:26 GMT
பார்வதீஸ்வரசாமி கோவிலில் உமா மகேஸ்வர சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம் கோவில்பத்தில் சுயம்வர தபஸ்வினி அம்பாள் சமேத் பார்வதீஸ்வரசுவாமி கோவில் உள்ளது. சமுத்திரராஜன் தான் பெற்ற தோஷங்கள், சாபங்கள் அனைத்தும் நீங்கும் வகையில் தவம் செய்ததன் பலனாக உமா மகேஸ்வரர் பவுர்ணமி தினத்தில் சமுத்திரத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகள் சகிதமாக நீராடி சமுத்திரராஜனுக்கு அருள்பாலித்த தினத்தில் உமாமகேஸ்வர தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு உமாமகேஸ்வர தீர்த்தவாரி நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு சுவாமி மற்றும் அம்பாளுக்கு விசேஷ அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை 6 மணிக்கு மண்டகப்படி மகாதீபாராதனை காட்டப்பட்டது. பகல் 1 மணியளவில் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் புடைசூழ தபஸ்வினி அம்பாள் சமேத பார்வதீஸ்வரசுவாமி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காரைக்கால்மேடு கடற்கரைக்கு எழுந்தருளினார்.

அதைத்தொடர்ந்து அங்கு பஞ்சமூர்த்திகளுக்கும் சிறப்பு பூஜைகளும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. பிறகு உமாமகேஸ்வர சமுத்திர தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து திரளான பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பார்வதீஸ்வரசுவாமி தேவஸ்தான அறங்காவலர் குழுவினர், காரைக்கால்மேடு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர். 

Similar News