ஆன்மிகம்

நவராத்திரியின் சிறப்பு தகவல்கள்

Published On 2016-10-08 08:28 GMT   |   Update On 2016-10-08 08:28 GMT
நவராத்திரி பற்றிய சில முக்கியமான, சிறப்பு மிக்க தகவல்களை கீழே பார்க்கலாம்.
விஜயதசமி மரம் :

சாதாரணமாக, கோவில்களில் வில்வம், வேம்பு, அரசமரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமரத்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னிமரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட்டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங்களின் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழிபட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டனர். அந்த நாளே விஜயதசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 முறை வலம் வந்தால் எண்ணியது ஈடேறும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நடக்கும்.

ஒழுக்கத்திருநாள் :

சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தாலும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை.

சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவணன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறுவயதிலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெபித்து நவராத்திரி விரதம் மேற்கொண்டார்.

அவருக்கு துர்க்கையாக காட்சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவணனை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜயதசமியாக மக்கள் கொண்டாடுகின்றனர். வெற்றிக்கு ஒழுக்கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.

விஜயதசமியன்று அழும் பக்தர்கள் :

நாடெங்கும் விஜயதசமி மிக மகிழ்ச்சியாக கொண்டாடப் படுகிறது. மகிஷாசுரனை அம்பிகை வெற்றிகொண்ட நாள் அது. ஆனால் மேற்கு வங்காள மாநிலத்தில் நவராத்திரி காலங்களில் களிமண்ணால் செய்யப்பட்ட துர்க்கை, காளி சிலைகளை வைத்து வழிபடுவார்கள். விஜயதசமி அன்று மண்ணால் செய்யப்பட்ட காளியின் சிலைகளைக் கடலில் கரைப்பார்கள். மீண்டும் தேவி அடுத்த ஆண்டு நவராத்திரிக்கே தங்கள் வீட்டுக்கு வருவாள் என்பது ஐதீகம். தங்களை விட்டுக் கிளம்பும் காளியின் பிரிவைத் தாங்க முடியாத பக்தர்கள் கண்ணீர் விட்டு அழுவதுண்டு.

வீரம் தரும் துர்க்கை :

துர்க்கையானவள் வீரத்தின் தெய்வம். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம் இவள் நெருப்பின் அழகுடன் ஆவேசப் பார்வை கொண்டவள் சிவபிரியையான துர்க்கை இச்சா சக்தி. ‘’கொற்றவை ‘’ என்றும் ‘’காளி’’ என்றும் குறிப்பிடுவர். வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

Similar News