ஆன்மிகம்

கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவிலில் தைப்பூசத்திருவிழா தொடங்கியது

Published On 2017-02-01 03:40 GMT   |   Update On 2017-02-01 03:40 GMT
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம், முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கன்னியாகுமரியை அடுத்த பழத்தோட்டம், முருகன் குன்றத்தில் வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூசத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா வருகிற 9-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி நேற்று அதிகாலை கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு யாகசாலைபூஜை, 10.30 மணிக்கு கொடி ஏற்றம் போன்றவை நடந்தன. மாலையில் சமய உரையும், இரவு பஜனையும், சுவாமி அம்பாளுடன் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றன. தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் காலையில் அபிஷேகம், சிறப்பு வழிபாடு, யாகசாலை பூஜை, மதியம் பிரசாதம் வழங்குதல், மாலையில் சமயஉரை, இரவு பஜனை, சாமி அம்பாளுடன் கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.

திருவிழாவின் இறுதி நாளான 9-ந் தேதி தைப்பூசத்திருவிழா அன்று காலையில் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், யாகசாலை பூஜை, மதியம் அன்னதானம் போன்றவை நடைபெறும். மாலையில் உற்சவமூர்த்தி கிரிவலம் உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு கார்த்திகை பொய்கையில் சாமிக்கு ஆறாட்டும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி முருகன்குன்றம் வேல்முருகன் கோவில் நிர்வாகக்குழு தலைவர் சிவபாலகிருஷ்ணன், கவுரவத்தலைவர் முத்துகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Similar News