ஆன்மிகம்
தைப்பூச காவடிகள் கட்டப்பட்டு ஊர்வலம் நடைபெற்றபோது எடுத்த படம்.

தைப்பூசத்தையொட்டி பழனிக்கு பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரை

Published On 2017-02-08 05:58 GMT   |   Update On 2017-02-08 05:58 GMT
தைப்பூசத்தையொட்டி சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரை சென்றனர்.
சேலம் மாவட்டம் இடைப்பாடியில் இருந்து பல ஆண்டுகளாக தைப்பூச காவடிகளுடன் பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். அதேபோல் இந்த ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகளுடன் பாதயாத்திரையாக பழனிக்கு செல்ல உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக இடைப்பாடி வெள்ளாண்டிவலசை வன்னியர் குலசத்திரிய ஆதி பரம்பரை காவடிகள், மேட்டுத்தெரு வன்னியர் குலசத்திரிய காவடிகள், ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு வன்னியர் குலசத்திரிய காவடிகள், நாச்சியூர் வன்னியர் குலசத்திரிய காவடிகள் கட்டப்பட்டு மேளதாளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக நேற்று ஊர்வலமாக சென்றனர். இதனால் நகரே விழாக்கோலம் பூண்டது.

ஊர்வலத்தின் போது ஒவ்வொரு பகுதியிலும் பழனி மலை போல் பூக்கள், காய்கறிகள் போன்றவற்றால் அலங்காரம் செய்து பொதுமக்கள், பக்தர்கள் காவடிகளை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் இன்று (புதன்கிழமை) இரவு ஆலச்சம்பாளையம், காட்டூர், மலங்காடு வன்னியர் குலசத்திரிய காவடிகள் பாதயாத்திரையாக புறப்பட்டு செல்ல உள்ளனர். நாளை (வியாழக்கிழமை) வெள்ளாண்டிவலசை வன்னியர் குலசத்திரிய ஆதி பரம்பரை காவடிகள் குழுவினர் பழனிக்கு பாதயாத்திரையாக செல்ல உள்ளனர்.

இந்த காவடிகளுடன் பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு வருகிற 12-ந்தேதி காங்கேயம் அருகே உள்ள வட்டமலையில் வன்னியர் குல சத்திரிய மருத்துவ அறக்கட்டளை மற்றும் இடைப்பாடி கே.ஆர்.எஸ். மருத்துவமனை மற்றும் சர்க்கரை நோய் மையம் சார்பில் டாக்டர் ரவிசுதன் தலைமையில் மருத்துவ குழுவினரின் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நடைபயண பாதசாரிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, ஊசி, மாத்திரை இலவசமாக வழங்கப்படுகிறது.

Similar News