ஆன்மிகம்

காளஹஸ்தி கோவில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Published On 2017-02-08 06:33 GMT   |   Update On 2017-02-08 06:33 GMT
ஸ்ரீகாளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்னர் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. இது குறித்த விரிவான செய்தியை கீழே பார்க்கலாம்.
15-ம் நூற்றாண்டில் கிருஷ்ண தேவராயரால் 146 அடி உயரத்தில் கட்டிய ராஜகோபுரம் கடந்த 2010-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி இடிந்து விழுந்தது. மீண்டும் புதிய ராஜகோபுரம் ரூ.50 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 2-ந் தேதி புதிய ராஜகோபுரத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவன் கோவில் மகா கும்பாபிஷேகத்துக்காக கடந்த 3-ந் தேதி அங்குரார்ப்பணம் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் 58 யாக சாலைகள் அமைத்து 120 சிவாச்சாரியார்களால் யாக, ஹோம, கலச பூஜைகள் நடைபெற்றது.

நேற்று முன்தினம் பரிவார மூர்த்தி சன்னதிகளில் உள்ள பிக்ஷால கோபுரம், பால ஞானபிரசுனாம்பிகை கோபுரம், திருமஞ்சன கோபுரம், சிவய்ய கோபுரம், நுழைவாயில் கோபுரம், தெற்கு கோபுரம் ஆகிய 6 கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

இன்று காலை 4 மணிக்கு அஷ்டம கால யாக பூஜை, பூர்ணாஹூதி, நெய்வேத்தியம், தீபாராதனையும், 6 மணிக்கு யாத்ரா தானம் நடந்தது. அதை தொடர்ந்து 7 மணிக்கு காளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார், நடராஜ சுவாமி மூலவர்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

மேலும் கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. சிவச்சாரியார்கள் கோபுர விமான கலசங்களில் புனித நீர் ஊற்றினர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் 120 சிவாச்சாரியார்கள் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து தேவ பூஜை, மகாஅபிஷேகம், நெய்வேத்தியம், மகாதீபாராதனை நடந்தது.

பகல் 3 மணி முதல் சர்வ தரிசனம் தொடங்குகிறது. இரவு 7 மணி முதல் 8 மணி வரை சுவாமி -அம்மையார் திருக்கல்யாண உற்சவம், இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நந்தி சேவை நடைபெறும். பஞ்சமூர்த்திகளும் 4 மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

நாளை மண்டலாபிஷேகம் தொடங்குகிறது.

Similar News