ஆன்மிகம்
42 அடி உயர வெட்காளி அம்மனுக்கு அபிஷேகம் நடந்ததையும், திரளான பக்தர்கள் தரிசனம் செய்ததையும் படத்தில் காணலாம்.

சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா

Published On 2017-02-11 04:26 GMT   |   Update On 2017-02-11 04:26 GMT
சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில் சக்திமாலை இருமுடி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே நாற்கரச்சாலை ஓரத்தில் அமைந்துள்ள சிந்தலக்கரை காளி பராசக்தி தவசித்தர் பீடத்தில், சித்தர் தவ குருபூஜை மற்றும் சக்திமாலை இருமுடி விழா நேற்று நடந்தது. காலையில் காளி பராசக்தி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் 42 அடி உயர வெட்காளி அம்மனுக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மும்மத பிரார்த்தனை நடந்தது. ராமமூர்த்தி சுவாமிகள், கீழ ஈரால் உதவி பங்குதந்தை அருள்குமார், புளியங்குடி முகமது பாதுஷா ஆகியோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மதியம் ராமமூர்த்தி சுவாமிகள் சித்தர் தவ குருபூஜை நடத்தினார். இரவில் சித்தருக்கு விளக்கு வழிபாடு நடத்தப்பட்ட பின்னர், குருபூஜை வழிபாடு நடந்தது. விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர் கள் பஸ்கள், வேன்களில் கோவிலுக்கு வந்தனர்.

பக்தர்கள் 40 நாட்கள் விரதம் இருந்து, செவ்வாடை அணிந்து இருமுடி கட்டி, கோவிலுக்கு வந்தனர். பக்தர் கள் சித்தர் பீடத்தில் இருமுடியை இறக்கி வைத்து வழிபட்டனர். விழாவில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரையிலும் அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. நெல்லை, சங்கரன்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு தர்மலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை காளிபராசக்தி தவசித்தர் பீட வார வழிபாட்டு மன்ற ஒருங்கிணைப்பாளர் திருக்குமரன் தலைமையில் மன்றத்தினர் செய்து இருந்தனர்.

Similar News