ஆன்மிகம்

வென்னிமலை முருகன் கோவில் பால்குடம் ஊர்வலம் நாளை நடக்கிறது

Published On 2017-03-09 04:58 GMT   |   Update On 2017-03-09 04:58 GMT
பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நாளை ( வெள்ளிக்கிழமை) நடக்கிறது.
பாவூர்சத்திரம் காமராஜ்நகர் வென்னிமலை முருகன் கோவிலில் மாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

முதல்நாள் திருவிழா காமராஜ்நகர் பொது மக்கள் சார்பில் நடைபெற்றது. மதியம் முதல் மாலை வரை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் கோவில் வளாகத்தில் பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினர். இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. தொடர்ந்து தினமும் பல்வேறு சமுதாயத்தினர் சார்பில் திருவிழாக்கள் நடந்தது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான பால்குடம் ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, காலையில் குறும்பலாப்பேரி பக்தர்கள் கீழப்பாவூர் சிவன் கோவிலில் இருந்தும், அதேபோல் பாவூர்சத்திரம், திப்பணம்பட்டி, பனையடிபட்டி ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து கோவிலை வந்து அடைகிறார்கள்.



ஊர்வலம் கோவிலை வந்து அடைந்த உடன் உச்சிகால பூஜை, மாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி நடைபெறுகிறது. இரவில் அலங் கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதிஉலாவும், கோவில் வளாகத்திலும் கடையம் ரோடு, சுரண்டை ரோடு ஆகிய பகுதிகளில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

விழாவை முன்னிட்டு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தென்காசி, சுரண்டை, கடையம், ஆலங்குளம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

Similar News