ஆன்மிகம்
சத்தியமங்கலம் அருகே பவானி ஆற்றை பண்ணாரி அம்மன் சப்பரம் பரிசலில் கடந்த காட்சி.

பவானி ஆற்றை பரிசலில் கடந்த பண்ணாரி அம்மன்

Published On 2017-04-01 03:07 GMT   |   Update On 2017-04-01 03:07 GMT
பண்ணாரி அம்மன் சப்பரம் பவானி ஆற்றை பரிசலில் கடந்து சென்றது. அப்போது கிராமமக்கள் தாரை, தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர்.
சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குண்டம் விழா கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 28-ந் தேதி இரவு பண்ணாரி அம்மன் மற்றும் சருகு மாரியம்மன் உற்சவ சிலைகளை மலர்களால் அலங்கரித்து சப்பரம் திருவீதி உலா புறப்பட்டது. அன்று இரவு சிக்கரசம்பாளையம் வந்து அங்குள்ள மாரியம்மன் கோவிலில் தங்க வைக்கப்பட்டது.

பின்னர் 29-ந் தேதி சிக்கரசம்பாளையத்தில் வீதிஉலாவை முடித்துவிட்டு அன்று இரவு புதூர் சென்று அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சப்பரத்துடன் தங்கினார்கள். நேற்று முன்தினம் புதூர் பகுதியில் வீதிஉலாவை முடித்துக்கொண்டு தொட்டம்பாளையத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று காலை தொட்டம்பாளையம் பகுதிகளில் பண்ணாரி அம்மன் சப்பரம் வீதி உலா வந்தது. அங்கு வீதி உலாவை முடித்துக்கொண்டு மாலையில் வெள்ளியம்பாளைம்புதூருக்கு சப்பரம் வந்தது. இங்கிருந்து அக்கரை தத்தப்பள்ளி செல்ல பவானி ஆற்றை பரிசலில் கடக்க வேண்டும்.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ஆற்றை கடக்க வெள்ளியம்பாளையம்புதூரில் ஆற்றின் கரையில் 2 பரிசல்கள் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இதில் ஒரு பரிசலில் சப்பரத்துக்கு பூசாரியும், மற்றொரு பரிசலில் பக்தர்கள் அம்மனின் திருக்குடை, ராமபானம், லட்சுமணபானத்துடன் அமர்ந்து அக்கரை தத்தப்பள்ளி கரையை அடைந்தனர்.



அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் தாரை தப்பட்டை முழங்க பண்ணாரி அம்மனின் சப்பரத்தை வரவேற்றனர். பின்னர் அக்கரை தத்தப்பள்ளியில் பண்ணாரி அம்மன் சப்பரம் வீதிஉலா நடந்தது. அங்கிருந்து அம்மன் சப்பரம் செல்லும் வழி முழுவதும் தண்ணீர் தெளிக்கப்பட்டது. வீதிஉலாவை முடித்ததும் அங்குள்ள மாரியம்மன் கோவிலில் சப்பரம் தங்க வைக்கப்பட்டது.

இன்று (சனிக்கிழமை) காலையில் உத்தண்டியூர், ராமாவரம், தாண்டாம்பாளையம், இக்கரைநெகமம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர் வழியாக பண்ணாரி அம்மன் வீதி உலா செல்கிறது. அங்கு வீதிஉலாவை முடித்துக்கொண்டு நள்ளிரவு 12 மணி அளவில் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டுமாரியம்மன் கோவிலில் தங்க வைக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து அந்தபகுதிகளில் பண்ணாரி அம்மன் வீதிஉலா நடக்கிறது. அங்கு வீதிஉலாவை முடித்துவிட்டு வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) சப்பரம் பண்ணாரி அம்மன் கோவிலை சென்று அடைகிறது. அன்று இரவு கோவில் முன்பு குழிக்கம்பம் நடப்படுகிறது. வருகிற 11-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா நடக்கிறது.

Similar News