ஆன்மிகம்

சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா தொடங்கியது

Published On 2017-04-01 06:02 GMT   |   Update On 2017-04-01 06:02 GMT
சிவகிரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து இரவு வரை விக்னேசுவர பூஜை, வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து நேற்று அதிகாலையில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், சுவாமிக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பிறகு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு கொடி மரம் அலங்கரிக்கப்பட்டது.

காலை 9.45 மணி அளவில் கொடியேற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. வருகிற 8-ந் தேதி (சனிக்கிழமை) தேரோட்டமும், 9-ந் தேதி தெப்ப திருவிழாவும் நடக்கிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் சிவகிரி ஜமீன்தார் ராஜா சேவுகப்பாண்டியன், பாஸ்கரவேலு, தொழில் அதிபர் திருப்பதி, நகர பஞ்சாயத்து முன்னாள் தலைவர் போஸ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜா பாண்டியன் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News