ஆன்மிகம்
நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் கருடமண்டபத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது

Published On 2018-05-22 05:24 GMT   |   Update On 2018-05-22 05:24 GMT
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் தொடங்கியது. பலத்த மழை பெய்ததால் நம்பெருமாள் வசந்த மண்டபம் செல்வதற்கு பதிலாக கருடமண்டபத்தில் எழுந்தருளினார்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின்போது நம்பெருமாள் கோவிலின் நான்காம் பிரகாரமான ஆலிநாடான் திருச்சுற்றில் சக்கரத்தாழ்வார் சன்னதி வடபுறம் அமைந்துள்ள அழகிய தோட்டத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.

உற்சவத்தையொட்டி தினமும் மாலை 5 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு சென்றடைவார். அங்கு மண்டபத்தில் நடுவில் நம்பெருமாள் ஒய்யாரமாக வீற்றிருப்பார். வசந்த உற்சவத்தின் போது 9 நாட்களும் வசந்த மண்டபத்தில் சூர்ணாபிஷேகம் என்றழைக்கப்படும் மஞ்சள் பொடியினை நம்பெருமாள் மீது தூவும் நிகழ்ச்சி இரவு 8 மணிக்கு நடைபெறும்.

இந்த ஆண்டு நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை நம்பெருமாள் உபநாச்சியார்களுடன் வசந்த மண்டபம் செல்ல இருந்த நிலையில், பலத்த மழை பெய்ததால் நம்பெருமாள் வசந்த மண்டபம் செல்வதற்கு பதிலாக கருடமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
Tags:    

Similar News