ஆன்மிகம்
கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெறவுள்ள அமராவதி ஆற்றுப்பகுதியை படத்தில் காணலாம்.

கரூர் மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி

Published On 2018-05-30 03:31 GMT   |   Update On 2018-05-30 03:31 GMT
கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. இதையொட்டி பசுபதிபாளையம் அமராவதி ஆற்றங்கரையானது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் 3 கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, அம்மன் சன்னதி எதிரே நட்டு வைத்து பக்தர்கள் புனிதநீர் ஊற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கடந்த 18-ந்தேதி கரூர் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளை எடுத்து வந்து, மாரியம்மனுக்கு படைத்து பூஜை செய்தனர். 20-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கடந்த 27-ந் தேதியில் இருந்து இன்று (புதன்கிழமை) வரை பிரார்த்தனை நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் பலர் வெளியிடங்களில் இருந்து கரூருக்கு வந்து அக்னி சட்டி எடுத்தல், பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், கூர்மையான வாளை முதுகில் தைத்துக்கொண்டு வருதல், பறவை காவடி எடுத்தல் என பல்வேறு வகையான நேர்த்திக்கடன்களை பயபக்தியுடன் செலுத்தி வருகின்றனர்.


கரூர் மாரியம்மன் கோவிலுக்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

நேற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வெள்ளமென திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதில் பறவை காவடி எடுத்து வந்தவர்களை பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். அவர்கள் வாகனத்தின் மேல் கம்பியில் தொங்கியபடி அமராவதி ஆற்றில் இருந்து கோவிலுக்கு வந்தடைந்தனர். இதேபோல் நின்ற நிலையில் உடலில் அலகு குத்தி, பறவை போன்ற காவடியை ஒரு குழுவினர் எடுத்து வந்தனர். திருவிழாவையொட்டி ஜவகர்பஜார் உள்பட வீதியெங்கும் அன்னதானம் மற்றும் நீராகாரங்களை பலர் பக்தர்களுக்கு அளித்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி கோவிலில் இன்று காலை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. மதியத்திற்கு மேல் கோவிலை சுற்றி சுத்த பூஜை நடைபெறும். பின்னர் மாலை 5.15 மணிக்கு கம்பத்தை எடுத்து ஊர்வலமாக கொண்டு சென்று பசுபதிபாளையம் அமராவதி ஆற்றில் விடப்படுகிறது.

இதையொட்டி அமராவதி ஆற்றங்கரையில் மின்விளக்குகளால் தோரணம் கட்டி தொங்கவிடப்பட்டிருப்பதால், அப்பகுதி விழாக்கோலம் பூண்டது. மேலும் கம்பம் விடும் ஆற்றுப்பகுதியில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு ராட்டினம் உள்பட பொழுதுபோக்கு அம்சங்கள் இருப்பதால் பொதுமக்கள்அங்கு சென்று கேளிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 
Tags:    

Similar News