ஆன்மிகம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2018-10-09 06:18 GMT   |   Update On 2018-10-09 06:18 GMT
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு காளி பூஜை, மதியம் 12 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு மகுட இசை, 5 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, 6 மணிக்கு கரகாட்டம், இரவு 7 மணிக்கு வில்லிசை, 8 மணிக்கு பக்தி இசை நடக்கிறது.

இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு அணிவிக்கப்படுகிறது.

நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வீதி உலா நடக்கிறது. காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து நேர்த்திக்கடனாக பல்வேறு நாட்கள் விரதம் இருந்து, காளி வேடம் அணியும் பக்தர்களுக்கு கோவில் பூசாரி காப்பு அணிவிப்பார்.

காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் தங்களது ஊர்களுக்கு சென்று, அங்குள்ள கோவில் அருகில் தசரா பிறையில் தங்கி விரதம் இருந்து வரும் பக்தர்களுக்கு காப்பு அணிவிப்பார்கள். காப்பு அணிவிக்கப்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து, ஊர் ஊராக சென்று, காணிக்கை வசூல் செய்து 10-ம் நாள் இரவில் கோவிலில் வழங்குவார்கள்.

விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. தினமும் இரவு 9 மணிக்கு அம்மன் பல்வேறு வாகனங்களில் பல்வேறு கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். முதலாம் நாளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்திலும், 2-ம் நாளில் கற்பகவிருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் கோலத்திலும், 3-ம் நாளில் ரி‌ஷப வாகனத்தில் பார்வதி கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் கோலத்திலும்,

6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகி‌ஷாசுரமர்த்தினி கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் கோலத்திலும் அம்மன் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

10-ம் நாளான வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான மகி‌ஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. 11-ம் நாளான 20-ந்தேதி (சனிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் தேரில் பவனி வருதல், மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. 12-ம் நாளான 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையுடன் தசரா திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா நாட்களில் தினமும் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் மாலையில் கோவில் வளாகத்தில் உள்ள சவுந்திரபாண்டிய நாடார்-தங்கக்கனி அம்மாள் கலையரங்கில் சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, பரதநாட்டியம், பட்டிமன்றம், பாவைக்கூத்து போன்ற கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
Tags:    

Similar News