ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா 8-ந்தேதி தொடங்குகிறது

Published On 2018-10-29 05:07 GMT   |   Update On 2018-10-29 05:07 GMT
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா வருகிற 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.
தமிழ்கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 8-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது.

7 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாவின் போது, தினசரி சின்னக்குமாரர், சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

6-ம் திருநாளான வருகிற 13-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் மதியம் 3 மணிக்கு மேல் மலைக்கொழுந்து அம்மனிடம் விசேஷ பூஜைக்கு பின்பு வேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் சின்னக்குமாரர், வில்-அம்பு, கேடயம், குத்தீட்டி உள்ளிட்ட அயுதங்களுடன் வீரபாகு, நவவீரர்களுடன் சேர்ந்து போருக்கு புறப்படும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

அதன் பின்னர் மலைக் கோவிலில் நடை அடைக்கப்படும். தொடர்ந்து சின்னக்குமாரர், தங்க சப்பரத்தில் எழுந்தருளி பாதவிநாயகர் கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் பாதவிநாயகர் கோவில் வந்தடையும் நிகழ்ச்சியும் நடைபெறும். அதனை தொடர்ந்து திருஆவினன்குடி கோவிலில் குழந்தை வேலாயுத சுவாமியிடம் சக்திவேல் வைத்து சிறப்பு பூஜை நடத்தப்படும். பின்னர் சக்திவேல் பாதவிநாயகர் கோவிலுக்கு கொண்டுவரப்பட்டு பெரிய தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரரிடம் வைத்து தீபாராதனை நடத்தப்பட்டு போருக்கு புறப்படும் நிகழ்ச்சி நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் வடக்கு கிரிவீதியில் யானைமுக சூரன் வதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோப சூரன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெறும். முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் இந்திர விமானத்தில் எழுந்தருளலும், சின்னக்குமாரர் சந்திப்பும், தீபாராதனையும் நடக்கிறது. அதைத்தொடர்ந்து ஆரியர் மண்டபத்தில் வெற்றி விழாவும் இரவு 9 மணிக்கு மேல் மலைக்கோவில் சம்ரோஜனை பூஜைக்கு பின்பு ராக்கால பூஜையும் நடைபெறும்.

விழாவின் 7-ம் திருநாளான வருகிற 14-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், அன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் இணை ஆனையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News