ஆன்மிகம்

பீமனும்.. அனுமனும்..

Published On 2019-01-01 08:38 GMT   |   Update On 2019-01-01 08:38 GMT
திரவுபதி விரும்பிய சவுகந்திகா என்னும் மலர்களை பறிப்பதற்காக சென்ற பீமனுக்கு உதவி புரிய அனுமன் செய்த விளையாட்டை அறிந்து கொள்ளலாம்.
வனவாசத்தை முடித்துக் கொண்டு பாண்டவர்கள் நாடு திரும்பினர். அப்போது சவுகந்திகா என்னும் பெயர் கொண்ட மலர் ஒன்று திரவுபதியின் மீது வந்து விழுந்தது. அந்த மலரின் வாசனை திரவுபதிக்கு மிகவும் பிடித்துப் போனது. அதேபோன்ற மலர்கள் நிறைய வேண்டும் என்று ஆசை கொண்டாள்.

அவளது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு பீமன் புறப்பட்டான். அவனுக்கு உதவி செய்ய அனுமன் எண்ணினார். இமயமலைச் சாரலை அடைந்து, அங்கு பீமன் வரும் வழியில் பாதையை அடைத்தவாறு படுத்துக் கிடந்தார். வேகமாக வந்து கொண்டிருந்த பீமன், வழியில் வாலை நீட்டியவாறு படுத்திருந்த மாருதியை தள்ளிப்படுக்குமாறு கூறினான்.

அனுமன் முடியாது என்று கூற இருவருக்கும் வாக்குவாதம் வளர்ந்தது. முடிவில் மாருதி பீமனைப் பார்த்து “நீயே என் வாலை இழுத்து அப்பாற் தள்ளிவிட்டுச் செல்” என்றார். பீமன் அவரது வாலை அலட்சியமாக தள்ளினான். ஆனால் ஆஞ்ச நேயருடைய வால் கல்போல் கனத்தது. பீமனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

பீமன் பிரமித்தான். “பீமா! நான் உன் அண்ணன் ஆஞ்சநேயன்” என்று மாருதி கூறியதும், பீமன் மகிழ்ந்து அவரை அணைத்தான். பின்னர் ஆஞ்சநேயர் இமயமலை தடாகத்தில் மலர்ந்து இருக்கும் சவுகந்திகா மலரைக் காட்டினார். பீமன் அவரை பணிந்து, சவுகந்தியா மலர்களை பறித்துக் கொண்டு சென்றான்.
Tags:    

Similar News