ஆன்மிகம்

சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா 12-ந்தேதி தொடங்குகிறது

Published On 2019-01-07 06:38 GMT   |   Update On 2019-01-07 06:38 GMT
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது.
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடான சோலைமலை முருகன் கோவில், அழகர்மலை உச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் தைப்பூச திருவிழா சிறப்புடையதாகும். இங்கு 10 நாட்கள் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இவ்வாண்டிற்கான தைப்பூச திருவிழா வருகிற 12-ந்தேதி (சனிக் கிழமை) காலை 11.15 மணி முதல் 11.45 மணிக்குள் மங்கல இசை முழங்க கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து அன்று மாலை யாகசாலை பூஜைகளும், பூதவாகனத்தில் சாமி புறப்பாடும் நடைபெறும். மறுநாள் 13-ந்தேதி காலை யாகசாலை பூஜைகளும், தொடர்ந்து உற்சவருக்கு மகா அபிஷேகமும், சாமி புறப்பாடும் நடைபெறும். பின்னர் அன்று மாலை அன்னவாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி எழுந்தருளி, புறப்பாடு நடைபெறும்.

அதன்பிறகு 14-ந்தேதி, 15-ந்தேதிகளில் வழக்கம்போல் பூஜைகளும், மாலை சாமி புறப்பாடும் நடைபெறும். பின்னர் 16-ந்தேதி மாலை பூச்சப்பரத்தில் சாமி புறப்பாடும், மறுநாள் மாலை யானை வாகனத்தில் சாமி புறப்பாடும், 18-ந்தேதி பல்லாக்கு புறப்பாடு நடைபெறும். 19-ந்தேதி மாலை குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடும், 20-ந்தேதி காலை 11 மணிக்கு தங்கத்தேரிலும், மாலை வெள்ளி மயில் வாகனத்திலும் சாமி புறப் பாடு நடைபெறும். 21-ந்தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பின்னர் யாகசாலை கலச அபிஷேகமும், கொடியிறக்கம், தீபாராதனையும் நடைபெறும்.

திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தினந்தோறும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். முன்னதாக மூலவர் வள்ளி, தெய்வானை சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனையும் நடைபெறும். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News