ஆன்மிகம்
கொடிமரத்திற்கு தீபாராதனை நடைபெற்றதையும், சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மனையும் காணலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா தொடங்கியது

Published On 2019-01-11 04:44 GMT   |   Update On 2019-01-11 04:44 GMT
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இந்த நிலையில் தை மாத திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் நேற்று காலை 10.40 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

அங்கு எழுந்தருளிய மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழா விழா வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. விழா நடைபெறும் நாட்களில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் நான்கு சித்திரை வீதிகளை காலை, இரவில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாததால் அப்போது நிலை தெப்பம் தான் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. எனவே இந்தாண்டு பக்தர்கள், தண்ணீர் நிறைந்த தெப்பத்தில் திருவிழா நடைபெறுவதை காணமுடியும்.

இதையொட்டி 19-ந் தேதி மாலை 4.30 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், 20-ந் தேதி கதிரறுப்புத் திருவிழாவும் நடைபெறுகிறது. விழா நாளான 21-ந் தேதியன்று மீனாட்சி, சுந்தரேசுவரர், பஞ்ச மூர்த்திகளுடன் கோவிலில் இருந்து புறப்பாடாகி மாரியம்மன் தெப்பக்குளம் செல்வர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்கள். பின்னர் தெப்பத்தில் காலையில் 2 முறை குளத்தை வலம் வந்து, அங்குள்ள மைய மண்டபத்தில் எழுந்தருள்கிறார்கள்.

மீண்டும் இரவில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்பக்குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

தெப்பத்திருவிழா நடைபெறும் தினமான 21-ந் தேதி அன்று அதிகாலை மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்ப உற்சவம் நடைபெற்று திருக்கோவில் வந்து சேரும் வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும்.

மேலும் பக்தர்கள் நலன் கருதி அன்று கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டம் திறந்து வைக்கப்படும். உள்ளே வருபவர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாக காலை 7 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் ஆகியோர் செய்து வருகிறார்கள். 
Tags:    

Similar News