ஆன்மிகம்

கதாயுதம் தாங்கி நிற்கும் பைரவர்

Published On 2019-01-11 10:15 GMT   |   Update On 2019-01-11 10:15 GMT
எல்லா சிவாலயங்களிலும் பைரவர் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள நகர சூரக்குடி தேசிகநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் வித்தியாசமானவர்.
பார்வதிதேவியின் தந்தை தட்சன், தன் பெருமையை பறைசாற்ற ஒரு யாகம் நடத்தினான். யாகத்திற்கு எல்லா தேவர்களையும் அழைத்தான். ஆனால் மருமகன் சிவபெருமானையும், மகள் பார்வதியையும் அழைக்கவில்லை. கோபமடைந்த பார்வதி, தந்தையைத் தட்டிக் கேட்டாள். யாகத்தை தடுத்து நிறுத்த யாககுண்டத்தில் குதித்தாள். இதனால் கோபம் கொண்ட சிவபெருமான், தன்னுடைய அம்சமான வீரபத்திரரை அனுப்பி, தட்சனின் யாக சாலையை அழித்தார். அதோடு சிவபெருமானே பைரவராக வடிவம் கொண்டு தட்சனையும் கொன்றார்.

மேற்கண்ட புராண வரலாற்றின் அடிப்படையில் தான், எல்லா சிவாலயங்களிலும் பைரவர் சன்னிதி அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள நகர சூரக்குடி தேசிகநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவர் வித்தியாசமானவர். பொதுவாக பைரவரின் கையில் திரிசூலம் இருக்கும். ஆனால் இங்குள்ள ஆனந்த பைரவர், கதாயுதத்தை வைத்திருக்கிறார்.

இத்தல இறைவனின் திருநாமம் தேசிகநாதர். அம்பாளுக்கு ஆவுடைநாயகி என்று பெயர். ‘தேசிகர்’ என்ற சொல்லுக்கு தந்தை, குரு, வணிகர் என பல பொருள் உண்டு. தந்தைக்கெல்லாம் தந்தை, குருவுக்கெல்லாம் குருவாக விளங்குபவர் என்ற பொருளிலும், பாவம் என்ற பணத்தை வாங்கிக்கொண்டு, புண்ணியத்தை வழங்கும் வணிகர் என்ற பொருளிலும் இத்தல இறைவனின் திருநாமத்தைப் பொருள் கொள்ளலாம். ‘ஆ' என்றால் ‘பசு'. பசுக்களாகிய உலக உயிர்களை காப்பவள் என்பதால், இத்தல அன்னைக்கு ஆவுடைநாயகி என்று பெயர்.

இந்த ஆலயத்தின் மூலவர் தேசிகநாதர் என்றாலும், பைரவரே பிரதான தெய்வமாக உள்ளார். பக்தர்கள் பைரவரை வழிபட்ட பின்னரே அம்பாளையும், சிவனையும் வழிபடுகின்றனர். சிவனுக்கு காண்பிக்கும் தீபாராதனை, பக்தர்களிடம் காட்டுவதில்லை. பைரவர் சன்னிதியில் காட்டும் தீபாராதனை தட்டை பக்தர்கள் தொட்டு வணங்க அனுமதி உண்டு. பைரவருக்கு முக்கியத்துவம் தரவே இவ்வாறு செய்யப்படுவதாக சொல்கிறார்கள்.

காரைக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயம், தினமும் காலை 6 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
Tags:    

Similar News