ஆன்மிகம்
அவினாசியில் தேரோட்டத்துக்கு தயார் நிலையில் அலங்கரிக்கப்பட்டு உள்ள சுவாமி திருத்தேரை படத்தில் காணலாம்.

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் இன்று தேரோட்டம்

Published On 2019-04-17 04:35 GMT   |   Update On 2019-04-17 04:35 GMT
சித்திரை திருவிழாவையொட்டி அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் இன்று(புதன்கிழமை) தேரோட்டம் நடக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் புகழ்பெற்ற கருணாம்பிகை அம்மன் உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் கொங்கு நாட்டில் பாடல் பெற்ற சிவாலயங்களில் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர்த்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அது போல் இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த 14-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் கற்பக விருட்சம் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கிடையே தேரோட்டத்தையொட்டி கோவில் திருத்தேர்கள் அலங்கரிக்கும் பணிகள் கடந்த சில நாட்களான நடைபெற்றன. திருத்தேர் தற்போது தேரோட்டத்திற்கு தயார் நிலையில் உள்ளன. அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் அவினாசியப்பர், சோமாஸ்கந்தர், உமா மகேஸ்வரியுடனும், சிறிய தேரில் கருணாம்பிகையும் எழுந்தருளினார்கள்.

இதையடுத்து தேர் மீது எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர். இன்று(புதன்கிழமை) காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18-ந்தேதி மாலை 4 மணி அளவில் அம்மன் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 19-ந்தேதி தெப்ப உற்சவமும், நடராஜர் தரிசனமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் லோகநாதன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News