ஆன்மிகம்
ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

நாமக்கல் அருகே பழனியாண்டவர் கோவில் தேரோட்டம்

Published On 2021-01-29 07:42 GMT   |   Update On 2021-01-29 07:42 GMT
தைப்பூசத்தை யொட்டி நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி பழனியாண்டவர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாமக்கல் அருகே உள்ள ரெட்டிப்பட்டி கந்தகிரி பழனியாண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்தையொட்டி தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பூத வாகனம், ஆட்டுக்கிடா, மயில் வாகனம், காமதேனு, ரிஷபம், யானை போன்ற வாகனங்களில் சாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 11 மணிக்கு சாமி தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 4 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது.

மலையை சுற்றி உள்ள பாதையில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியவாறு தேரை இழுத்தனர். வழி நெடுகிலும் ஏராளமான பெண்கள் தேங்காய், பழம் வைத்து சாமியை வழிபட்டனர். இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ராஜேஸ்குமார், எருமப்பட்டி ஒன்றியகுழு தலைவர் (பொறுப்பு) லோகநாதன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் இந்த தேரோட்டத்தை காண நாமக்கல், கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தூசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்டு இருந்தனர். தேரோட்டத்தையொட்டி அங்கு கரும்பு விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
Tags:    

Similar News