2,148 விநாயகர் சிலைகள் ஊர்வலம் இன்றுடன் நிறைவு
- நேற்றும் இன்றும் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர்.
- சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
சென்னை:
சென்னையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி கடந்த 18-ந்தேதி அனைத்து இடங்களிலும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன.
சென்னை மாநகர பகுதிகளில் 1,519 சிலைகளும் தாம்பரம் கமிஷனர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் 425 சிலைகளும், ஆவடி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 214 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த ஒரு வாரமாக பூஜை செய்யப்பட்டு வந்தது. இதன்மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2,148 சிலைகள் பூஜை செய்யப்பட்டு வந்தன.
இந்த சிலைகளை நேற்றும் இன்றும் கரைப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். இதற்காக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை, நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை ஆகிய நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்த இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முதல் சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முதல் நாளான நேற்று சுமார் ௩௦ சதவீதம் அளவுக்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இன்று 2-வது நாள் நடைபெற்ற ஊர்வலத்தில் சென்னை மாநகரில் உள்ள 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் உள்ளன. 2,148 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகிறது.
இந்த சிலைகளை கரைப்பதற்காக வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என தனித்தனியாக ஊர்வலம் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழியாக மட்டுமே சிலைகளை எடுத்துச்செல்ல அனுமதிக்கபட்டிருந்தது. இதன்படி இன்று காலை முதலே விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. பகலில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் திருவல்லிக்கேணியில் இருந்து பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது.
அதேபோன்று பாரத் இந்த முன்னணி அமைப்பின் சார்பில் சூளை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையும் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது விநாயகர் சிலைகள் எந்தவித அசம்பாவிதங்களும் இன்றி கடலில் கரைக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஊர்வலம் பாதைகள் முழுவதிலும் போலீசார் கண்காணித்து வந்தனர்.
பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய கடற்கரை பகுதிகளில் சிலை களை கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
தென் சென்னை கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா மேற்பார்வையில் பட்டினப்பாக்கத்தில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சிலைகளை கடலில் எடுத்துச் சென்று கரைப்பதற்கு ராட்சத கிரேன்கள் நிறுத்தப்பட்டிருந்தன.
அதன் மூலமாக விநாயகர் சிலைகளை கடலுக்குள் தூக்கிச் சென்று கரைத்தனர். கண்காணிப்பு கோபுரங்களும் கடற்கரை பகுதிகளில் அமைக்கப்பட்டு போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளை யொட்டி உள்ள வழிபாட்டு தலங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
குறிப்பாக திருவல்லிக்கேணியில் ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்படாத இடம் வழியாக இந்து முன்னணி சார்பில் ஊர்வலம் நடத்தப்படும். இந்த ஆண்டும் அது போன்று ஊர்வலம் நடத்தப்பட்டது.
பின்னர் ஊர்வலத்தில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 25 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.