வழிபாடு

26-8-2024 கிருஷ்ண ஜெயந்தி: வாழ்வை வளமாக்கும் கிருஷ்ணர் வழிபாடு

Published On 2024-08-23 04:29 GMT   |   Update On 2024-08-23 04:29 GMT
  • அவதாரங்களில் முக்கியமானது கிருஷ்ண அவதாரம்.
  • துவாபர யுகத்தின் முடிவில், கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது.

காக்கும் தெய்வம் என்று அழைக்கப்படுபவர் மகாவிஷ்ணு. இந்த உலகத்தில் எப்போதெல்லாம் அதர்மம் தலைதூக்குகிறதோ, அப்போதெல்லாம் அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுபவர்.

அவரது அவதாரங்களில் முக்கியமானது, கிருஷ்ண அவதாரம். அவர் அவதரித்த நாளையே 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடுகிறோம்.

வசுதேவர்- தேவகி தம்பதியருக்கு ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைச்சாலைக்குள் பிறந்தவர், கிருஷ்ணர். ஆனால் அவர் வளர்ந்தது கோகுலத்தில் உள்ள நந்தகோபர்- யசோதா தம்பதியரிடம்.

தன்னுடைய 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் கிருஷ்ணரின் இளம் வயது காலங்கள் கழிந்தன.

இந்த காலகட்டங்களில் கிருஷ்ணர், பல அரக்கர்களை அழித்ததோடு, பல அற்புதங்களை செய்து கோபியர்களையும், கோகுலவாசிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

பிறந்தது முதலே கிருஷ்ணரைக் கொல்ல ஏராளமான அரக்கர்களை அனுப்பிய கம்சனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இறுதியாக அவன், கிருஷ்ணரை மதுராவிற்கு அழைத்து கொன்று விட முடிவு செய்தான்.

அதன்படி "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன். அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறி அனுப்பினான். அவரும் நந்தகோபரிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். இதையடுத்து பலராமரும், கிருஷ்ணரும் மதுராவிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

ஆனால் அங்கு மல்யுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான், கம்சன். கண்ணனை அழிப்பதற்காக சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற பலம் வாய்ந்த மல்லர்களை தயார் செய்து வைத்திருந்தான். அவர்களுடன், கிருஷ்ணரையும், பலராமரையும் யுத்தம் செய்யும்படி கம்சன் உத்தரவிட்டான்.

அப்போது கிருஷ்ணருக்கு 10-க்கும் குறைவான வயதுதான். ஆனால் கிருஷ்ணரும், பலராமரும் எந்த தயக்கமும் இன்றி, மாமிச மலைபோல் இருந்த மல்யுத்த வீரர்களுடன் போரிட்டு அவர்கள் அனைவரையும் கொன்றனர்.


இறுதியில் கம்சனையும், கிருஷ்ணர் வதம் செய்தார். பின்னர் பல ஆண்டுகளாக சிறையில் இருந்த, பெற்றோரான வசுதேவர்- தேவகி, பாட்டனார் உக்கிரசேனர் ஆகியோரை விடுவித்தார்.

அதன்பிறகுதான் தங்களின் கல்வியையே கிருஷ்ணரும், பலராமரும் கற்கத் தொடங்கினர். அவர்களின் குருவாக இருந்து கல்வியை கற்பித்தவர், சாந்திபனி முனிவர். இவரிடம் சகலக் கலைகளையும் கற்றுத் தேர்ந்த கிருஷ்ணர், அவருக்கு குரு தட்சணையாக வெகு காலத்திற்கு முன்பு, கடலில் விழுந்த குருவின் மகனை, உயிருடன் மீட்டுக்கொண்டு வந்து கொடுத்தார்.

துவாபர யுகத்தின் முடிவில், கிருஷ்ணரின் அவதாரமும் முடிவுக்கு வந்தது. இதையெல்லாம் நினைவுகூரும் வகையில்தான் ஆண்டுதோறும், கிருஷ்ணரின் அவதார நாளை 'கிருஷ்ண ஜெயந்தி' என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று வீடுகளில் குதூகலம் நிறைந்திருக்க வாசல் முழுவதும் கோலமிட்டு, வாசலில் இருந்து பூஜை அறை வரை சின்னச் சின்ன காலடிச் சுவடுகளை வரைவார்கள். மாயக்கண்ணன் இளமையில் செய்த சேட்டைகளை நினைத்தாலே பரமானந்தத்தை தரும்.

அவற்றில் முக்கியமானது, கோபியர் வீடுகளில் உறியில் கட்டியிருக்கும் பானைகளை உடைத்து வெண்ணெயை எடுத்து தின்றது. இதை நினைவுகூரும் வகையில்தான், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பல இடங்களிலும் உறியடித் திருவிழா நடத்தப்படுகின்றன.

கிருஷ்ணர் தனக்காக இல்லாமல், உலகத்தின் உயிர்களுக்காக வாழ்ந்தவர். அதனால்தான் அவரை 'கண்ணா', 'முகுந்தா' என்று அழைக்கிறோம். 'கண்ணன்' என்றால் 'கண் போல காப்பவன்' என்று பொருள். 'முகுந்தா' என்றால் 'வாழ்வதற்கு இடம் அளித்து முக்தி அளிப்பவன்' என்று பொருள்.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பகவான் கிருஷ்ணர், நம் அனைவரின் வீட்டிற்கும் வந்து அருள்பாலிப்பார் என்பதே முக்கியமாக அம்சமாக பார்க்கப்படுகிறது. அவரை வரவேற்கும் விதமாகத்தான், அவரது பிஞ்சுப் பாதங்களை வீட்டில் வரைகிறோம்.

வீட்டில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அல்லது படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. அதோடு கிருஷ்ணருக்கு பிடித்த 'தஹிகலா'வை படைத்து வழிபட வேண்டும்.

'தஹிகலா' என்பது பல்வேறு தின்பண்டங்களுடன் தயிரும், பாலும், வெண்ணெயும் ஆகியவற்றை கலந்து செய்வதாகும். தவிர சீடை, முறுக்கு, லட்டு போன்ற இனிப்பு உணவுகளையும் கிருஷ்ணருக்கு படைக்க வேண்டும். இவ்வாறு நைவேத்தியம் படைக்க முடியாதவர்கள், தங்களால் முடிந்ததை செய்யலாம்.

ஏனெனில் "ஒரு இலை, ஒரு பூ, ஒரு பழம், கொஞ்சம் தண்ணீர், அதோடு தூய்மையான பக்தியையும் சேர்த்து அளித்தால், நான் அவர்களுக்கு தேவையானதைச் செய்வேன்" என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார்.


கிருஷ்ணனின், மனைவியும்.. பிள்ளைகளும்..

கண்ணனைப் பற்றி பேசும் போதெல்லாம், அவர் மீது அன்பு கொண்ட, அவரால் அன்பு செய்யப்பட்ட மூன்று பெண்கள் நினைவுக்கு வருவார்கள். அவர்கள்தான், ராதை, ருக்மணி, சத்யபாமா. கண்ணனுக்கு ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தா, நாக்னஜிதி, பத்திரா, லக்குமனை என்று 8 பட்டத்து ராணிகள் உண்டு.

இவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன. கிருஷ்ணரின் பிள்ளைகளில் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன் ஆகியோர் புகழ்பெற்றவர்கள்.

Tags:    

Similar News