வழிபாடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி கருடசேவை விழா

Published On 2024-07-22 06:44 GMT   |   Update On 2024-07-22 06:44 GMT
  • 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
  • பக்தர்கள் பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆனி மாதம், ஆடி மாதம் என ஆண்டுக்கு 3 கருட சேவை உற்சவங்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

பெருமாளை வணங்கு வதற்காக குளத்தில் இருந்து தாமரைப் பூவை பறித்த யானையான கஜேந்திரனின் காலை, முதலை பற்றிக் கொண்ட நிலையில், கஜேந்திரன் அலறியபடி பெருமாளை அழைத்தார். பெருமாள் கருட வாகனத்தில் காட்சியளித்து முதலையை அழித்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனை குறிக்கும் வகையில் கஜேந்திர மோட்சம் அருளும் ஆடி மாத கருட சேவை உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.

இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற பட்டு உடுத்தி, செண்பகப்பூ, மனோரஞ்சித பூ, மல்லிகைப்பூ, பஞ்சவர்ண பூ மலர் மாலைகள், திருவா பரணங்கள் அணிவித்து, மஞ்சள் பட்டு உத்திய தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பின்னர் தங்க கருட வாகனத்தில் வரதராஜ பெருமாள் அனந்த சரஸ் திருக்குளத்தின் அருகே எழுந்தருளி கஜேந்திர மோட்சம் அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடர்ந்து மேள, தாள வாத்தியங்கள் முழங்க கோவிலில் ஆழ்வார் பிரகாரத்தில் உலா வந்து கோபுர தரிசனம் தந்தார்.

இதையடுத்து பெருமாள், நான்கு மாட வீதிகளிலும் தங்க கருட வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்க கருட வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா... என்று பக்தி கோஷமிட்டு தரிசனம் செய்தனர். 

Tags:    

Similar News