தேவையான அனைத்தையும் அருள்வார் குரு பகவான்
- நவக்கிரகங்களில் ஞானம் அருளும் மூர்த்தி-குரு பகவான்.
- எல்லா சிவாலயங்களிலும் கோஷ்ட தட்சிணாமூர்த்தி உண்டு.
நவக்கிரகங்களில் ஞானம் அருளும் மூர்த்தி-குரு பகவான். பொதுவாக, குரு யாரையும் கெடுக்க மாட்டார். சிவபெருமானே குரு வடிவாகி, அருள் பாலிப்பதாகச் சொல்வார்கள். ஆலங்குடி திருத்தலத்தில், கோஷ்ட தட்சிணாமூர்த்தியாக - குரு பகவானாக விளங்கி அருள்புரிந்து வருகிறார் ஈசன்.
சாதாரணமாக, எல்லா சிவாலயங்களிலும் கோஷ்ட தட்சிணாமூர்த்தி உண்டு. ஞான உபதேசம் அருளும் இவரே குரு மூர்த்தி ஆவார். இத்தகைய இவரின் உத்சவ விக்கிரகம் பெரும்பாலும் எந்தக் கோவிலிலும் இருக்காது. ஆனால், குருவுக்கு உண்டான சிறப்புத் தலம் என்பதால், மூலவர் தட்சிணாமூர்த்தியின், அதாவது குரு மூர்த்தியின் வடிவத்தைப் போலவே ஓர் உத்சவர் விக்கிரகமும் இங்கு உண்டு.
இத்தனை பெரிய உத்சவ விக்கிரகத்தைப் பெரும்பாலும் வேறு ஆலயங்களில் தரிசிப்பது அரிது. கல்லால மரத்தடியில் அமர்ந்து, நான்கு ரிஷிகளுக்கு ஞானோபதேசம் அருளும் கோலத்தில் இந்த உத்சவ குருமூர்த்தி விக்கிரகம் காணப்படுகிறது.
பிரஹஸ்பதியான வியாழ பகவானுக்கு நவக்கிரக மூர்த்திகளில் குரு ஸ்தானத்தை ஈசன் கொடுத்திருந்த போதிலும், தன் பக்தர்களுக்குத் தானே குரு மூர்த்தியாக- குரு ஸ்தானத்தில் இருந்து அருள வேண்டும் என்பதற்காக ஸ்ரீதட்சிணாமூர்த்தி வடிவத்தில் பல ஆலயங்க ளில் எழுந்தருளி, ஞானம் போன்ற செல்வங்களை வழங்குகிறார்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டாலும், வியாழ பகவானின் அருள் கிடைக்கும். வியாழ பகவானை வணங்கினாலும், ஸ்ரீதட் சிணாமூர்த்தியின் அருள் கிடைக்கும்.
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, பத்து நாட்கள் பெரும் திருவிழா ஆலங்குடியில் நடைபெறும். அதில் பத்தாம் நாளன்று குரு பகவானின் தேர்த் திருவிழா விமரிசையாக நடைபெறும். காணக்கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். மாசி மாதத்தில் மகா குரு வார தரிசனமும் கொண்டாடப்படுகிறது.
ஆலங்குடியில் மூலவர் குரு பகவா னுக்குத் தினமும் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் அபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு மூலவர் குரு பகவானுக்கு அபிஷேகம் கிடையாது. உத்சவருக்குத்தான் செய்வார்கள்.
உத்சவருக்கான அபிஷேகம் தினமும் காலை 8 மணி முதல் 8.30 வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 12.30 வரையிலும், மாலை 5 மணி முதல் 5.30 வரையிலும் நடைபெறும்.
குருவின் அருள் வேண்டி தினந்தோறும் இந்த ஆலயத்துக்கு நூற்றுக்கணக்கானோர் படை எடுத்து வருகின்றனர்.
முனைப்பான பக்தி இருந்தால் குருவின் அருளை எளிதில் பெற்று விடலாம். நவக்கிரகங்களில் தலை சிறந்தவர் எனவும், அதிக அளவில் நன்மைகளை அருளும் சுபக் கிரகமாக வும் குருபகவான் கொண்டாடப் படுகிறார். புகழ், ஞானம், சந்தோஷம், பொருட்செல்வம், வேலை வாய்ப்பு, திருமண பாக்கியம், குழந்தைப் பேறு போன்றவற்றை அருளு வதில் தாராள மனம் கொண்டவர் குரு பகவான்.
'குருவை வணங்கி வருகிறவர்கள் வேறு எந்த மூர்த்தியையும் வணங்க வேண்டியதில்லை' என்று சொல்லப்படுவதுண்டு. இதன் பொருள், குருவைத் தவிர, வேறு எவரையும் வணங்கக் கூடாது என்பதல்ல. குருவை வணங்கினால், அவர் நமக்குத் தேவையான அனைத்தையும் அருள்வார் என்கிற பொருளில் பார்க்க வேண்டும். உயர்ந்த பதவியில் அமர வைத்து அழகு பார்ப்பதாகட்டும், பதவியில் அமர்ந்தவர்க்குப் பெரும் புகழ் சேர்ப்பதாகட்டும், எல்லாவற்றையும் குருவே பார்த்துக் கொள்வார். குரு பார்க்கக் கோடி நன்மை! மனமுருகி இவரைக் கும்பிட்டால், அருள வேண்டியதை அவரே பார்த்துக் கொள்வார்!
'குரு' என்ற சொல்லில், 'கு' என்பதற்கு இருள் என்றும், 'ரு' என்பதற்கு 'அறவே நீக்குதல்' என்றும் அர்த்தம் உண்டு. அதாவது, 'குரு' என்ற சொல்லுக்கு 'நம்மிடம் உள்ள இருளை அறவே நீக்குபவர்' என்பது பொருளாகும்.