வழிபாடு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நெல்லை ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள்

Published On 2024-01-22 07:55 GMT   |   Update On 2024-01-22 07:55 GMT
  • ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
  • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது.

நெல்லை:

ராமஜென்ம பூமியான அயோத்தியில் பால ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதனையொட்டி அயோத்தி நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லை மாவட்டத்தில் உள்ள ராமர் கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. அதன் ஒரு பகுதியாக சுத்தமல்லி விலக்கு வ.உ.சி. நகரில் உள்ள ஸ்ரீ ஜெய் மாருதி ஞான தர்ம பீடத்தில் சிறப்பு அபிஷேக தீபாராதனையுடன் நாம ஜெபம் நடைபெற்றது. மேலச்சேவல் நவநீதகிருஷ்ணன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பெண்களுக்கு கோலப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பிரசித்தி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க கோவில்களில் ஒன்றான நெல்லையை அடுத்த அருகன்குளம் காட்டு ராமர் கோவிலில் இன்று அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பிதழ் மற்றும் கோவில் புகைப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தொடர்ந்து கோவிலில் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில் சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு சீதா பிராட்டி சமேத ஸ்ரீ ராமபிரான், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

பின்னர் பால், தயிர், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News