வழிபாடு

2 கி.மீ. தூரத்துக்கு 272 புரவிகள் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2022-06-18 04:34 GMT   |   Update On 2022-06-18 04:34 GMT
  • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை.
  • புரவி எடுப்பு விழாவை ஏராளமானோர் பார்த்து தரிசித்தனர்.

சிங்கம்புணரி அருகே எம்.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற செகுட்டு அய்யனார், சூரக்குடியில் சிறைமீட்ட அய்யனார், படைத் தலைவி அம்மன் கோவில் உள்ளன. இந்த கோவில்களில் புரவி எடுப்பு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக புரவி எடுப்பு விழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் இந்த ஆண்டு புரவி எடுப்பு விழா நடத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக புரவி தயாரிக்கும் பணி கடந்த 3-ந் தேதி குலால வம்சத்தை சேர்ந்தவர்களிடம் பிடி மண் வழங்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட அவர்கள் குதிரை சிலை செய்ய நான்கு கரை பங்காளிகளுடன் இணைந்து சுமார் 40-க்கும் மேற்பட்டோர் 272 புரவிகளை எம்.சூரக்குடி புரவி பொட்டலில் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், தொற்று நோயில் இருந்து காப்பது உள்ளிட்டவைக்காக புரவி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் தயாரான 272 புரவிகள் எம்.சூரக்குடி மையப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது.அங்கு இருந்து நேற்று மாலை 5 மணி அளவில் சுவாமி அழைத்து புரவிகள் புறப்பட தயாரானது. மேளதாளங்கள் முழங்க பக்தர்கள் புரவிகளை சுமந்து கொண்டு புறப்பட்டனர். இதில் சிறைமீட்ட அய்யனாருக்கு அரண்மனை புரவி ஒன்றும் படைத்தலைவி அம்மன் கோவிலுக்கு மண்ணால் செய்யப்பட்ட அம்மன் சிலை ஒன்றும், செகுட்டுஅய்யனார் கோவிலுக்கு அரண்மனை புரவி ஒன்றும் என 270 புரவிகள் புறப்பட்டன.

சூரக்குடிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டிக்கு புரவிகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. புரவி எடுப்பு விழாவை ஏராளமானோர் பார்த்து தரிசித்தனர். கோவிலை சுற்றி உள்ள வளாக பகுதியில் புரவிகளை இறக்கி வைத்து தங்கள் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே ரெங்கநாதன் காந்திமதி டிரஸ்ட் மூலம் குடிநீர், நீர்மோர் வழங்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News