வழிபாடு

வைகுண்ட துவாதசியையொட்டி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

Published On 2023-12-25 05:12 GMT   |   Update On 2023-12-25 05:12 GMT
  • பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர்.
  • பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது.

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவாதசி விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் இருந்து உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊழியர்கள் ஊர்வலமாக பூவராகசாமி கோவில் அருகில் ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்து, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணி புனிதநீரில் அர்ச்சகர்கள் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.

 அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், சுதர்சன சக்கரத்தாழ்வாரை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

 வைகுண்ட துவாதசியையொட்டி திருப்பதியில் உள்ள பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், கோவிந்தராஜசாமி கோவில், நாராயணவனம், நாகலாபுரம், தொண்டமநாடு ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.

Tags:    

Similar News