வழிபாடு

சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோவில் தேரோட்டம்

Published On 2024-03-08 03:49 GMT   |   Update On 2024-03-08 03:49 GMT
  • தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
  • இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது.

திருமலை:

பிரம்மோற்சவ விழாவின் 8-வது நாளான நேற்று காலை தேரோட்டம் நடந்தது. தேரில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 8-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 9 மணிவரை தேரோட்டம் நடந்தது.

அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை குதிரை வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர், `கல்கி' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலித்தார்.

சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி

பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணியில் இருந்து 9.30 மணி வரை உற்சவர்களான சக்கரத்தாழ்வார், ஸ்ரீதேவி, பூதேவி, கல்யாண வெங்கடேஸ்வரருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது. அதன் பிறகு காலை 9.45 மணியளவில் கோவில் முன்னால் உள்ள புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு கொடியிறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News