திருத்தணி முருகன் கோவிலில் தேரோட்டம்
- திருத்தணி, முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும்.
- தேரோட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
திருத்தணி:
திருத்தணி கோவில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கடந்த 14-ம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில் புலி வாகனம்,
வெள்ளி மயில் வாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காலை, இரவு என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் 7-வது நாளான நேற்று தேரோட்டம் கோவில் மாட வீதியில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி- தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மரத்தேரினை கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் சுரேஷ்பாபு ஆகியோர் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின்னர் பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் அரோகரா அரோகரா என்ற கோஷம் மலைக்கோவில் முழுவதும் பக்தி மயமாக காட்சி அளித்தது.
கடம்பத்தூர் ஒன்றியம் கூவம் கிராமத்தில் திரிபுராந்தக சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகின்ற 23-ந்தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் இந்த பிரமோற்சவ விழா நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான 7-ம் நாளான நேற்று காலை திருத்தேர் திருவிழா நடைபெற்றது. அப்போது வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் திரிபுராந்தக சுவாமி, திரிபுரசுந்தரி அம்பாளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் சாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
ஆர்.கே. பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய நாகப்பூண்டி கிராமத்தில் நாகேஸ்வர சாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் நடைபெற்று வந்தது. இதில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபா ஆராதனைகள் நடைபெற்றன. அதன் பிறகு உற்சவ மூர்த்திகளான நாகவல்லி சமேத நாகேஸ்வரர் சாமி அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.