வழிபாடு

சித்திரை மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Published On 2024-04-11 03:48 GMT   |   Update On 2024-04-11 03:48 GMT
  • 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை.
  • சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும்.

சபரிமலை:

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் மண்டல மகரவிளக்கு சீசன், பங்குனி உத்திர திருவிழா, விஷு, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களில் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். பின்னர் வழக்கம்போல் பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் வழக்கமான பூஜைகளும், 18-ந் தேதி வரை 8 நாட்கள் நெய்யபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, சகஸ்ரகலச பூஜை, புஷ்பாபிஷேகம் நடைபெறும். முன்னதாக 14-ந் தேதி விஷு பண்டிகை நாளில் சிறப்பு பூஜை அதிகாலை 3 மணி முதல் நடைபெறும். அன்றைய தினம் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு தந்திரி, மேல் சாந்தி ஆகியோர் நாணயங்களை கை நீட்டமாக வழங்குவார்கள்.

சன்னிதானத்தில் கனி காணல் சடங்குகளும் நடைபெறும். தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு, உடனடி முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல்லில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையொட்டி அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.

Tags:    

Similar News