வழிபாடு

தமிழ் புத்தாண்டையொட்டி பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2024-04-15 03:02 GMT   |   Update On 2024-04-15 03:02 GMT
  • அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பழனி:

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு ஆகும். இங்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு, வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை முதலே கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் பழனிக்கு வருகை புரிந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு வந்து தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகை எதிரொலியாக படிப்பாதை, யானைப்பாதை, சன்னதி வீதி, கிரிவீதிகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்திலும் கூட்டம் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

தமிழப் புத்தாண்டையொட்டி முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமான் சந்நியாசி அலங்காரத்திலும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரத்திலும் அருள்பாலித்தார். பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரமும் செய்யப்பட்டது.

பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

பின்னர் உச்சிகால அபிஷேகமும், 10.30 மணிக்கு சுவாமி சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

இதைமுன்னிட்டு திருச்செந்தூரில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் கோவிலுக்கு வந்தனர். கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 6 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News